Monday 5 September 2016

காலம்

    
                                          

சில வருடங்களுக்கு முன்பு லண்டனில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்.ஒரு வாலிபன் எப்போதும் போல் அலுவலகம் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் புறப்படுகிறார்.அவரது அலுவலகம் செல்லும் வழியில் ஒரு குகை இருக்கிறது.அந்தக் குகையைக் கடந்து தான் அவர் எப்போதும் அலுவலகம் சென்று வருவார்.அன்றும் அவ்வாறு குகையைக் கடந்து அலுவலகம் சென்றவர் வழமைப் போல் மாலை திரும்ப வில்லை.ஒரு நாள் ஆனது.இரண்டு நாள் ஆனது  வீட்டிலுள்ள வர்கள் பதறினார்கள்.காவல் நிலையத்திலும் புகார் செய்தார்கள். எல்லோரும் சேர்ந்து தேடினார்கள்.கிடைக்க வில்லை.சரியாக ஒரு வாரம் கழித்து எப்போதும் அவர் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மாலை நேரத்தில் இல்லம் வந்தார்.எல்லோரும் ஆச்சர்யத்தோடும் அதிசயத்தோடும் அவரைப் பார்த்து ஆனந்தமடைந்தார்கள்.வீட்டில் பரபரப்பான சூழ்நிலையில் எல்லோரும் அவரை சுற்றி கூடி விட்டனர். ஆனால் அவரிடம் எந்தக் கலவரமும் இல்லை.நீங்கள் ஒரு வாரமாக ஏன் வர வில்லை.ஒரு வாரமாக எங்கே காணாமல் போய் விட்டீர்கள் என்று கேட்ட போது என்ன ஒரு வாரமா நானா காணாமல் போய் விட்டேனா இல்லையே எப்போதும் போல் காலையில் அலுவலகம் சென்று மாலையில் திரும்பி இருக்கிறேன் என்று சொன்னாராம்.ஒரு வாரம் என்பது அவருக்கு ஒரு நாளாக இருக்கிறது.

இதுவரை ஆன்மீக உள்ளரங்கில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட சம்பவங்கள் பிற்பாடு பொது வெளி அரங்கிலும் அரங்கேற ஆம்பித்து விட்டது என்பதைத்தான் இந்த அரிய லண்டன் நிகழ்வு பறைசாற்றுகிறது.

ஜக்கரிய்யா மவ்லானா அவர்களின் பிரதான கலீஃபா தாருல் உலூம் தேவ்பந்தின் தலைமை முஃப்தியாக இருந்த மஹ்மூது ஹஸன் தங்களது மள்ஃபூஸாத்தில் ஒரு செய்தியை பதிவு செய்திருக்கிறார்கள்.அதில் ;

رئيس الطآئفة الصوفية சூஃபி குழுமத்தின் தலைவர் என்று அறியப்படுகிற இமாம் சய்யுதுனா ஜுனைதுல் பக்தாதி ரஹ் அவர்களது வாழ்வில் அவர்களது சீடருக்கு நிகழ்ந்த ஓர் அதிசயம் ; அந்த சீடர் சுனைதுல் பக்தாதி ரஹ் அவர்களிடம் வந்து கூறினார் ; ஷைகு அவர்களே ஒரு நாள் காலை பஜ்ர் நேரத்தில் எதார்த்தமாக குளிப்பதற்காக ஆற்றிற்கு சென்றேன்.பஜ்ர் பாங்கு சொல்லப்பட்டு விட்டது.குளிப்பதற்காக ஆடைகளைக் களற்றி வைத்து விட்டு ஆற்றுக்குள் இறங்கி ஒரு முங்கு போட்டேன். அவ்வளவு தான் நான் எங்கோ சென்று விட்டேன்.ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் நான் இருக்கிறேன்.அங்கு பல ஆண்டுகள் வாழ்கிறேன்.அங்கு எனக்கு திருமணம் நடக்கிறது.குழந்தைகளும் பிறக்கிறார்கள்.மனைவி மக்களுடன் பல வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.எதார்த்தமாக அங்கும் குளிப்பதற்காக ஒரு ஆற்றிற்கு வருகிறேன்.அங்கு வந்து என் ஆடைகளை களைந்து விட்டு ஆற்றுக்குள் இறங்கி முங்கினேன்.என்ன அதிசயம் மீண்டும் இந்த ஊருக்கு வந்து விட்டேன்.ஆடைகளை யெல்லாம் அணிந்து பள்ளிக்கு சென்றால் அன்று காலை பஜ்ர் பாங்கு சொல்லி இன்னும் இகாமத் சொல்ல வில்லை.அப்படியென்றால் பஜ்ர் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட அந்த நேரம் அவருக்கு பல வருடங்களை உருண்டோடச் செய்து விட்டது.

அதற்கு ஷேகு அவர்கள் ஆன்மீக அதிசயங்களை அதன் முன்னேற்றங் களை ஒருவருக்கு அல்லாஹ் ஏற்படுத்த நாடுகிற போது அவரது ஆயுட்காலம் அதற்குப் போதாத ஒரு நேரமாக இருந்தால் அல்லாஹ் அவருக்கு இவ்வாறு காலத்தில் அதிசய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறான் என்று பதிலளித்தார்கள். (நூல் ; மள்ஃபூஸாத்தே ஃபகீஹுல் உம்மத்)

300 வருடங்களுக்கும் மேலாக உறங்கிய குகைவாசிகளுக்கு அது ஒரு நாளாக அல்லது அரை நாளாகத் தெரிந்தது.ஒரே நாளில் அவர்களுக்கு 300 வருடங்களைக் கடத்தி அல்லாஹ் அவர்களை ஆன்மீக உயர்வுக்கு வழிவகுத்தான்.பொதுவாக குழந்தைகளின் உடல் வளர்ச்சி உறக்கத்தில் தான் அதிகமாக நிகழ்கிறது.விழிப்பில் அல்லாஹ் அவர்களின் உடல் வளர்ச்சிக்கான வேலைகளைச் செய்யாமல் அவர்களை உறங்க வைத்து உடல் உறுப்புக்களின் வளர்ச்சிக்கு வழிகோலுகிறான். அதனால் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அதிகமாக உறங்கும்.நாள் ஆக ஆக அந்த உடல் வளர்ச்சியின் தொடர்ச்சியைப் பொறுத்து அவர்களின் உறக்கம் குறைந்து கொண்டே வரும்.ஆரம்பத்தில் அக்குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது அவர்களின் ஆரோக்கியமாகக் கருதப்பட்டது. அதே உறக்கம் படிப்படியாகக் குறைந்து  குறைந்து இயல்பு நிலைக்கு வருவது அவர்களின் வளர்ச்சி சீராக நடைபெற்று நிறைவாகிக் கொண்டு வருகிறது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.அதேபோல ஆன்மீகத்தின் வளர்ச்சியும் வளர்ப்பும் ஆன்மாவுடைய உறக்கத்தில் அதாவது ஆழ்நிலை தியானத்தில் நடக்கிறது.மேன்மக்களை - தியானத்தில் ஈடுபடுபவர்களை ஆழ்நிலை உறக்கத்திற்கு அழைத்துச் சென்று சில சமயங்களில் ஒரு குறுகிய காலத்தில் பல காலங்களை உருண்டோடச் செய்கிறான்.

இந்த வகையில் பல வருடங்களில் நிகழக்கூடிய ஆன்மீக உருவேற்றத்தை அந்த குகைவாசிகளுக்கு அவர்களின் ஒரே நாளில் உருவாக்கினான்.பொதுவாக ஷைகுமார்கள் குருமார்களின் துணை கொண்டு நடைபெறுகிற தர்பிய்யத்தில் குறுகிய காலத்தில் நிறைந்த பலனை அல்லாஹ் ஏற்படுத்திவிடுகிறான்.குருவில்லாத நேரடியான பயிற்சியில் பல காலங்கள் ஆகிவிடுகிறது.காட்டில் தானாக முளைக்கக் கூடிய மரங்கள் அவ்வளவாக பழம் தருவதில்லை. ஆனால் மனித முயற்சியில் முளைவிக்கப்படுகின்ற மரங்கள் அதிகமாக கனிகள் கொடுப்பதையும் அவைகள் சுவைமிக்கதாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

இறைவனையன்றி வேறு எதையும் வணங்க மாட்டோம் என்று கூறிய இளைஞர்களின் வரலாற்றைக் கூறும் முன் இறைவன் அவ்விளை ஞர்களை நமக்கு இப்படி அறிமுகப் படுத்துகிறான்.
نَّحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُم بِالْحَقِّ ۚ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى
18:13. (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

وَرَبَطْنَا عَلَىٰ قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا ۖ لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطً18:14.
அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு (யாரையும் எதையும்) இறைவனை வணங்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.ا

இறைநம்பிக்கையற்ற கொடியவர்களின் கொடுமைகளிலிருந்து காப் பாற்றப்பட,எதற்கும் பயப்படாமல் இறைவனிடம் தங்களின் பாதுகாப்பை ஒப்படைத்து இறைவனின் நாட்டப்படி குகைக்குப் போய் குகையின் மத்தியிலே படுத்து விட்டார்கள் அந்த இளைஞர்கள். அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போதிலும்,அவர்களைப் பார்ப்பவர்கள் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவார்கள். அவர்களுடைய நாய் ஒன்றும் தன் முன்னங்கால்களை விரித்து நுழைவாயிலின் படியில் படுத்திருந்தது.

இறைவன் அவர்களை எழுப்பினான். "நீங்கள் எவ்வளவு காலம் இங்கே தங்கியிருந்தீர்கள்?" என்று அவர்களில் ஒருவர் கேட்க "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம்" என மற்றொருவர் பதில் சொல்ல "நீங்கள் தங்கியிருந்த காலத்தை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன்" என மற்றவர்கள் கூறினார்கள்.

இந்த வகையில் காலத்தின் கோலத்தை அதன் ரகசியத்தை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

நமக்கு வித்தியாசமானதாகவும், ஒழுங்கற்றதாகவும் பூரணமாக விளங்கவும் விளக்கவும் முடியாததாகவும் தோன்றுபவைகளை இறைவன் மட்டுமே முழுமையாக அறிவான். நமக்கு "காலத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் கணிப்புகள் உண்டு."

"காலத்தைப் பற்றிய மர்மங்கள் சிந்தனையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடுகின்றன. நமது இந்த தவறான கணிப்புகள் நாம் இறந்து மீண்டும் எழுப்பபடும் போது காலமே இல்லாத அந்த நிலையில், இவ்வுலகு பற்றிய நமது தவறான கருத்துக்கள், கணிப்புகள் முடிவான உண்மை (Reality) மூலம் திருத்தப்படும்."

وَيَسْتَعْجِلُونَكَ بِالْعَذَابِ وَلَن يُخْلِفَ اللَّهُ وَعْدَهُ ۚ وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ
22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதி க்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

இறைவனிடம் காலம் என்று ஒன்று தனியாக இல்லை.அதில் நடைபெறும் சம்பவங்களை நீக்கிப் பார்த்தால் காலத்திற்கு தனி அடையாளமில்லை. நாம் காலத்தைக் கணக்கிடுவது நமது சார்பியல் கணக்கிடுதல் (Relative Calculation)  களுக்குத் தான்.இறைவனுடைய இருத்தல் (Existence) என்பது வரம்பற்ற, எல்லை யற்ற, கலப்பற்ற முழுமையானது.

காலத்தைப் பற்றிய கேள்வியும் பதிலும் இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறது.

ஒன்று ; இந்த உலகத்தின் மிக குறுகிய கால வாழ்க்கையை நிலைத்திருக்கும் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இறை நம்பிக்கையற்றவர்கள் எவ்வளவு தவறு செய்து விட்டார்கள், எவ்வளவு இழப்பில் இருக்கிறார்கள் என்பது.

இரண்டு ; நமக்கு இப்போது தெரிந்திருக்கும் காலம் உலர்ந்து விடும், தெளிவற்றுப் போய் விடும். அழிந்து விடும். காலம் இந்த நிலையில் லாத உலக வாழ்க்கையில் தொடர்புடைய சம்பந்தப்பட்ட, தனித்தன்மை யற்ற அல்லது "சுயேச்சை இல்லாத சார்பியல்" அளவு தான்.

تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

இந்த உலக வாழ்க்கையின் காலத்தை அளந்தால் அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு சமமாகும். ஆன்ம உலகில் அவை ஒரு நாள் தான். மிக உயர்ந்த ஆன்ம அறிவு உள்ளவர்கள் இதனை புரிந்து கொள்வார்கள்.

மத நம்பிக்கையற்ற முற்கால அரபு மக்கள் "காலத்தை" கடவுளாக்கி, சிலை வடிவாக்கி, மனிதர்களுக்கு நல்லதையும், கெட்டதையும் கொடுக்கும் தெய்வம் என்று வணங்கி வந்தார்கள். 
وما يهلكنا الا الدهر 

காலத்தைத் தவிர வேறு எதுவும் எங்களை அழிக்க முடியாது என்றும் கூறி வந்தார்கள். (அல்குர்ஆன் :45; 24)

இந்த நடத்தை, மனப்பான்மை, சிந்தனை நிச்சயம் தவறு.காலம் படைப்பாளி இல்லை.அது கடவுளின் கைப்பாவை.காலம் அதற்குரிய மர்மங்களோடு இருக்கிறது. ஆனால் நிரந்தரமானதல்ல.

இருபதாம் நூற்றண்டின் இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் "காலத்தின் சார்பியலை" (Relativity Of Time) உண்மைப்படுத்தி விட்டார்.

காலம் சார்பியல் உடையது தான். முழுமை (Absolute) யானதல்ல. இறைவன் தான் முழுமையானவன், நிரந்தரமானவன், ஆரம்பமும் முடிவுமற்றவன்.
وَالْعَصْرِ
103:1. காலத்தின் மீது சத்தியமாக.
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

நம்பிக்கை, நற்செயல், உண்மை, பொறுமை, விடா முயற்சி பற்றிய போதனை இவைகளைத் தவிர வேறு எதுவுமே ஒரே இடத்தில் அல்லது ஒரே நிலையில் தொடர்ந்திருப்பதில்லை என்பதற்கு காலம் சாட்சியாக இருக்கிறது.

காலம் எப்போதும் நம்பிக்கை கொண்டோருக்கு சாதகமாகவே இருக்கிறது. காலத்தை நாம் எதிர்த்து போட்டி போட்டு ஓடினால் நாம் தோற்று விடுவோம். நம்மில் இருக்கும் நமது "ஆன்மீக பாகம் " காலத்தை வென்று விடும்.

ஸூஃபி மஹான் அபூ ஸயீது இப்னு அபில் கைர் அவர்களும், அவர்களுடைய இரண்டு அத்தியந்த நண்பர்களும் காஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஷாமை உறானா என்ற சிற்றூருக்கு ஒரு சமயம் சென்றார்கள். மலைப்பாங்கான  அப்பகுதியில் நீரோடை ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒழூ செய்து விட்டு அங்கே இருந்த பெரியார் ஒருவருடைய கப்ரை ஜியாரத் செய்வதற்காக கிளம்பினார்கள். அந்த கப்ர் அருகில் சிறுவன் ஒருவன் வயலை உழுது கொண்டிருந்தான். அந்த வயலின் ஓரத்தில் கப்ருக்கு சமீபமாக கிழவர் ஒருவர் தன் அறிவை இழந்தவர் போல் அழுவதும் அந்த சமாதியைப் பார்ப்பதுமாக அமர்ந்து இருந்தார்.

அபூ ஸயீது அவர்கள் சொல்கிறார்கள் ; "அவருடைய நிலையைக் கண்டு நாங்கள் மன நெகிழ்ச்சி அடைந்தோம். அவர் எங்களிடம் வந்து ஸலாம் சொல்லி விட்டு, என் இதயத்தினுள்ள ஒரு சுமையை உங்களால் இறக்க முடியுமா..? என்று கேட்டார். இறைவன் நாடினால் என்று நான் கூறினேன்.

அவர் சொன்னார் ; இறைவன் இவ்வுலகை சிருஷ்டித்தானே அது சமயம் ஒரு ஜீவராசியையும் சிருஷ்டித்திராமல்,அது முழுவதிலும் கிழக்கு முதல் மேற்கு வரை பூமி முதல் வானத்தளவுக்கு தானிய மணிகளை நிறைத்துப் போட்டு, அதன் பின் ஒரு குருவியை மட்டும் படைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தானிய மணிகளில் ஒன்றைத் தின்னுமாறு அதை ஏவி விட்டு அதன் பின் ஒரு மனிதனை படைத்து அவன் மனதில் அகமிய ஏக்கங்களை உண்டாக்கி, உலகம் முழுமையும் நிறைந்து கிடக்கும் தானிய மணிகள் அத்தனையும் அந்த குருவி தின்று தீர்க்கும் வரை அவன் தன் லட்சியத்தை எய்த முடியாது என்றும் தெரிவிப்பானாயின் இந்த தகிக்கும் காதல் தாபத்தால் அந்த மனிதன் அத்தனை "காலத்தையும்" விரைவில் தாண்டிவிட முடியும் என்று  தான் நான் சிந்தித்து சிந்தித்து திழைத்துக் கொண்டிருக்கிறேன்.அந்த கிழவரின் பேச்சு சகல மர்மங்களையும் எனக்கு தெளிவாக்கியது.

கலீல் ஜிப்ரான் என்ற லெபனான் நாட்டு கவிஞர் காலம் பற்றி சொல்கிறார்  ;
ஒரு வானவியல் அறிஞர் முன் வந்து "காலம் என்றால் என்ன..?" என்று கேட்டார்.
அதற்கவர் பதில் சொன்னார் ;
"அளவுகள் இல்லாததும் அளக்க முடியாததுமான காலத்தை நீங்கள் அளக்க வேண்டும்."

உங்கள் ஒழுக்கத்தையும், உங்கள் ஆன்மாவின் போக்கையும் கூட, பருவ காலங்களுக்கும் பொழுதுகளுக்கும் ஏற்றபடி ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

காலத்தைக் கொண்டு ஒரு நீரோடை உண்டாக்கி, அதன் கரையில் அமர்ந்து அதன் ஓட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.
இருப்பினும், உங்களுக்குள் இருக்கும் காலமின்மை, வாழ்க்கையின் காலமின்மையை உணர்ந்து கொள்ளும்.இன்றைய நாள், நேற்றையின் நினைவு என்றும், நாளையின் கனவு என்றும் அறிந்து கொள்ளும்.
அது உங்களுக்குள் பாடும். சிந்திக்கும். அது இன்னும் விண்மீன்களைப் பிரபஞ்ச வெளியில் சிதறிவிட்ட அந்த முதல் கணத்திலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பிரபஞ்சம் வெளி,காலம்,பொருள்,ஆற்றல் ஆகிய நான்கு அம்சங்களின் கூட்டாக இருக்கின்றன என்றார் நியூட்டன்.இதில் வெளி, காலம் என்ற இரண்டு அம்சங்களையும் தனது விஞ்ஞான ஆய்வுக்கு அப்பால் வைத்தார்.இந்த நான்கும் மெஞ்ஞானத்தின் கருவூலம். மெஞ் ஞானத்தின் பொக்கிஷங்கள்.

காலம் வெளியைப்பற்றி விஞ்ஞானம் யோசித்தது.ஆனால் மெஞ்ஞானம் சாதித்தது.அன்று அவர்கள் தள்ளி வைத்த அந்த இரண்டையும் இன்று அள்ளி எடுத்துக் கொண்டார்கள்.அதையும் விவாதப் பொருளாக ஆக்கிக் கொண்டார்கள்.

வெளியும் காலமும் ஒன்றையொன்று சாராத இரண்டும் தனித்தனி அம்சங்கள் என்ற நியூட்டனின் கருத்தை மாற்றி அவை இரண்டும் ஒன்றுக்கொன்று சார்புடையவை என்று தனது சார்பியல் தத்துவத்தை அவருக்குப் பிறகு சுமார் 250 ஆண்டுகள் கழித்து வருகிற ஐன்ஸ்டைன் (1879 – 1955) முன்வைத்தார்.

எந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு இடம் தேவை.ஒரு நேரமும் அவசியம்.இதை நிகழ்ச்சி நிரல் நோட்டீஸைப் பார்த்தாலே நாம் புரிந்து கொள்ளலாம்.

எப்போதும் மாறிக் கொண்டிருக்கிற இந்த உலகில் இப்பிரபஞ்சமும் பொருட்களும் அதன் ஆற்றல்களும் அவைகள் எழுப்புகிற அலைகளும் ஓடி விளையாடித் தரிகின்ற ஆடுகளமாக வெளியும் காலமும் கருதப்பட்டன.

நிகழ்வுகள் நிகழக்கூடிய காலம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்கிறது.ஆனால் அந்த நேரம் ஆளுக்கு ஆள் இடத்திற்கு இடம் மாறுபடுவதில் தான் காலத்தின் புதிரே அமைந் திருக்கிறது.

இந்த வகையில் குகைவாசிகளின் 309 வருடங்கள் அவர்களுக்கு ஒரு நாளாக தெரிந்தது.

வியப்பின் வியப்பாகத் திகழும் மிஃராஜ் என்ற வின்னேற்றப்பயணம் ஏழு வானங்களையும் கடந்து சித்ரதுல் முன்தஹாவை அடைந்து அங்கிருந்து அர்ஷுக்கு சென்று காலமே இல்லாத இடமில்லாத ஒரு பகுதியில் அல்லாஹ்வை சந்தித்து உரையாடிய அந்த நிகழ்வு, சொர்க்கம் நரகம் கண்டு பல்வேறு அதிசயங்களைப் பார்த்து பல யுகங்கள் பிடிக்கிற அந்த நிகழ்வு நடைபெற்ற காலத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்கிற போது ليلا  இரவின் ஒரு சிறு பகுதி என்கிறான்.

தாழ்பாளின் அசைவு அடங்குவதற்குள் நீரின் சலனம் நிற்பதற்குள் படுத்திருந்த படுக்கையின் சூடு ஆறுவதற்குள் அந்த சம்பவம் நடந்ததாக நபிமொழிகள் விவரிக்கின்றன.

ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் காலம் இயங்குவதில்லை என்று சொல்வார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

உதாரணமாக நண்பர் ஒருவருக்கு 35 வயது.அவரது மனைவிக்கு 30 வயது.நண்பர் மட்டும் தனியே ஒளி வேகத்தில் பயணிக்கும் ஊர்தியில் (ஒரு வினாடிக்கு 186282 மைல் தூரம்) கிழம்பிப் போகிறார்.ஒரே ஒரு நாள் மட்டும் ஒளியின் வேகத்தில் பயணித்து மறுநாள் ஊர் திரும்புகிறார் என்றால் அவரை வரவேற்க வந்த மனைவிக்கு வயது 90. ஆனால் நண்பருக்கோ 35 வயதில் ஒரே ஒரு நாள் மட்டும் தான் கூடியிருக்கும்.

அல்பகரா வசனம் 259 ல் அல்லாஹ் உஜைர் நபி அலை அவர்களின் வரலாற்றைச் சொல்கிறான்.அதில் 100 வருடங்கள் உஜைர் நபிக்கு ஒரு நாளாக இருந்தது.அல்லது ஒரு நாளின் பகுதியாக இருந்தது.

இந்த வரலாற்றுப் புதினத்தில் உஜைர் நபிக்கு 40 வயது.ஆனால் அவரது மகனுக்கு 118 வயது.அவரின் மகளின் பிள்ளைகள் கிழவர்களாக முதிய பருவத்தில் இருந்தார்கள்.

ஒரு பெரிய மகான் இருந்தார்கள்.அவர்கள் அடிக்கடி ஹள்ரத் ஹிள்ர் நபி அலை அவர்களைக் காணுகின்ற பாக்கியம் பெற்றிருந்தார்கள். மட்டுமல்ல, விரும்புகிறவர்களுக்கு காண்பிக்கவும் செய்வார்கள். இதைக் கேள்விப்பட்ட அந்தக் காலத்து அரசர் தனக்கும் கிளர் நபி அலை அவர்களைக் காண்பிக்குமாறும் அவர்களது சந்திப்பை ஏற்படுத்து மாறும் கேட்டுக் கொண்டார்.அதை ஏற்றுக் கொண்ட பெரியவர்,ஹிள்ர் நபி அலை அவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்.அப்போது அந்த மன்னர் ஹிள்ர் நபி அலை அவர்களிடம் கேட்ட ஒரு கேள்வி ;

அதிசயமான இவ்வுலகில் இறக்காமல் இன்று வரை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் கண்ட நிகழ்வுகளில் உங்களை வியப்பில் ஆழ்த்திய ஒன்றை சொல்லலாமா ? அப்போது ஹிள்ர் நபி அலை அவர்கள் சொன்னார்கள் ; நான் ஒரு சமயம் ஒரு தோட்டத்தின் வழியாக சென்றேன்.அந்த தோட்டத்தினுள் பிரவேசிக்கிற போது அதனுடைய துவக்கத்தில் ஒருவர் திராட்சைப் பழத்தின் கூடை ஒன்றைக் கொடுத்தார்.இதன் விலை என்னவென்று நான் கேட்டேன். இல்லை, இலவசம்.இது இந்த நாட்டின் இளவரசர் கொடுத்த அன்பளிப்பு. யாரெல்லாம் இந்த வழியாக வருகிறாரோ அவர்களுக்கெல்லாம் இதைக் கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு உத்தரவு என்று சொன்னார்.அந்த தோட்டத்தையெல்லாம் சுற்றிப் பாரத்து விட்டு அதிலிருந்து வெளியேறுகிற போது அங்கு அதன் கடைக்கோடியில்  ஒருவர் எனக்கு இனிப்புக் கொடுத்தார்.இதன் விலை என்ன என்று கேட்ட போது இல்லை, இலவசம்.அரசருடைய உத்தரவு.கொடுக்க வேண்டும் என்று பதிலளித் தார்.அதற்குப் பிறகு 500 வருடங்கள் கழித்து மீண்டும் அதே இடத்திற்கு வந்தேன்.ஆனால் அங்கு தோட்டம் இல்லை. பெரும் நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.அங்கிருந்தவர்களிடம் இங்கே ஒரு தோட்டம் இருந்ததே அது எங்கே என்று கேட்டேன்.தோட்டமா இங்கே அப்படி ஒன்று இருக்கவே இல்லை.எங்கள் மூதாதையர்கள் கூட அப்படி ஒன்று இருந்ததாக எங்களிடம் சொன்னதில்லை.நாங்கள் பார்த்த கேள்விப் பட்ட வரை இது தான் இங்கே ஓடிக் கொண்டிருக்கிறது என்றார்கள். அதற்குப் பிறகு ஒரு 500 வருடங்கள் கழித்து மீண்டும் அந்த இடத்திற்கு நான் வந்தேன்.அப்போது அந்த நதியும் இல்லை.வெறும் காடு தான் இருந்தது.அங்கிருந்தவர்களிடம் இங்கே ஒரு நதி ஓடிக் கொண்டிருந்ததே என்று கேட்டேன்.நதியா இங்கே எப்போதும் நதி ஓடியதே இல்லை.காடாகத்தான் இருக்கிறது என்று அவர்களும் பதில் சொன்னார் கள்.மீண்டும் ஒரு 500 வருடங்கள் கழித்து நான் அங்கே சென்றேன்.அப்போது அங்கே பழைய தோட்டம் இருந்தது.நான் தோட்டத்திற்குள் பிரவேசித்தேன்.அப்போது அவர் எனக்கு திராட்சைப் பழக்கூடையைக் கொடுத்தார் .இதன் விலை என்னவென்று கேட்டேன்.அதற்கவர் நேற்று தானே வந்தாய்.நான் இலவசம் என்று சொன்னேன்.ஒவ்வொரு நாளும் பதில் சொல்ல வேண்டுமா என்று கேட்டார்.அங்கிருந்து திரும்புகிற போது அதன் முடிவில் ஒருவர் எனக்கு இனிப்பு கொடுத்தார். அவரிடத்திலும் அந்தக் கேள்வியைக் கேட்ட போது அவரும் அதே பதிலைத் தான் சொன்னார்.இதை சொல்லி விட்டு ஹிள்ர் நபி அலை அவர்கள் எனக்கு 1500 வருடங்கள் ஆகியிருக்கிறது.ஆனால் தோட்டக் காரருக்கு ஒரு நாள் தான் ஆகியிருக்கிறது என்று சொன்னார்கள். (நூல் ; மள்ஃபூஸாத்தே ஃபகீஹுல் உம்மத் 1/67)

தஜ்ஜாலின் வருகையின் போது ஒரு நாள் ஒரு வருடத்தைப் போல, அதற்குப் பிறகு ஒரு நாள் ஒரு மாதத்தைப் போல,அதற்குப் பிறகு ஒரு நாள் ஒரு வாரத்தைப் போல,அதற்குப் பிறகு அவனுடைய நாட்கள் உங்களுடைய நாட்களைப் போலவே இருக்கும்.மொத்தம் அவன் இங்கே 40 நாட்கள் இருப்பான் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள். (முஸ்லிம் : ஹதீஸ் எண் ; 2937, திர்மிதி  : ஹதீஸ் எண் ; 2240    மிஷ்காத் : ஹதீஸ் எண் ; 5463)

இவ்வாறே யுக முடிவு நேரத்தில் மனிதர்கள் இவ்வுலகை விட்டும் மறு உலகத்திற்கு செல்லும் போது அவர்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்த நீண்ட ஆயுட்காலமெல்லாம் காலையில் அல்லது மாலையில் ஒரு சொற்ப நேரமேயன்றி உலகில் நாங்கள் தங்கியிருக்க வில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். (அல்குர்ஆன் : 79 ; 49)

புதிரின் உச்சம் சொல்ல வேண்டும் என்றால் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்று சொல்லப்படுகிற புதிருக்குப் புதிரான புரிய முடியாத இப்பிரபஞ்சத்தின் படைப்பாளனாகிய அல்லாஹ்வே தன்னை நானே காலம் என்று சொல்வது தான்.

காலம் பற்றி அருமை நாயகம் அவர்கள் அல்லாஹ் கூறுவதாக ஹதீஸே குதுஸியில் சொல்கிறார்கள்  ;
قال الله عز وجل : يؤذيني ابن آدم يسب الدهر ، وأنا الدهر بيدي الأمر ، أقلب الليل والنهار
"அல்லாஹு தஆலா சொல்கிறான். ஆதமுடைய மகன் காலத்தை திட்டுவதின் மூலம் என்னை நோவினை செய்கிறான். காலமே நானாக இருக்கிறேன்.. ஏனெனில் பகலும் இரவும் என் கையில் இருக்கிறது.  (புகாரி  : ஹதீஸ் எண் ; 4826, முஸ்லிம்  : ஹதீஸ் எண் ; 2246)

காலமே இல்லாத எங்கள் இறைவனே... நீ தான் காலத்தைத் தந்தவன். உன்னுடைய படைப்புகள் புதிரானவையே.
நீயோ புதிருக்கு புதிரானவன்.!
நாங்கள் காலத்தை எப்படி புரிந்து கொள்வது..?
ஷாமைஉரானா கிழவர் கூறியவற்றைப் பற்றி சிந்திப்போம். ஆயிரம் மைல் பிரயாணம் ஒரு பாத அடியில் தான் ஆரம்பமாகிறது.

எங்கள் இறைவனே...! அந்த ஒரு அடியை எடுத்து வைக்கிற நற்பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்.


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks