Wednesday 22 July 2015

அடிக்க அடிக்க அம்மியும் நகரும்,உருக உருக கல்லும் கரையும்!!


ஒவ்வொரு வாரமும் குத்பாவி [பிரசங்கத்தி] ல் தக்வாவை [இறையச்சத்தை] க் கொண்டு இமாம் வசிய்யத் [உபதேசம்] செய்கிறார். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்,அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு வாரமும் அதைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.ஏன் ஒவ்வொரு வாரமும் அதை சொல்ல வேண்டும்?
அதிலும் இரண்டு குத்பாவிலும் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

இரண்டாவது குத்பாவில் அரபியில் மட்டும் தான் சொல்கிறோம். திரும்பத் திரும்ப ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் புரியாத மொழியில்! அதைச் சொல்வதினால் என்ன பிரயோஜனம்? என்றெல்லாம் நினைக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாவிற்கும், இதயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாவு எதை வேண்டுமானாலும் பேசும். பொய்யைக் கூட பேசும், உண்மையும் பேசும். அதற்கு வித்தியாசம் தெரியாது. ஆனால் உள்ளம், அதற்கு உண்மை மட்டும் தான் தெரியும். அது இந்த உலகத்தைச் சார்ந்தது அல்ல. ஆகிரத்தைச் [மறுமையை] சார்ந்தது, அல்லாஹ்வுக்கு உரியது என்று மேன்மக்கள் சொல்வார்கள்.

எனவே தான் “குற்றமுள்ள மனசு குருகுருக்கும் என்று சொல்வார்கள். நீ எவ்வளவு தான் பொய் சொன்னாலும் பொய்தான்டா சொல்கிறாய் என்று உள்ளம் சொல்லி விடும், எனவே தான் நபி (ஸல்) அவர்கள்,  اسْتَفْتِ قَلْبَكَ  நீ உனது கல்பி [உள்ளத்தி] டத்திலே பத்வா [தீர்ப்பு] கேள்  என்று சொன்னார்கள். மனசாட்சிக்கு விரோத மில்லாமல் நடந்து கொள்ளப்பா என்று சொல்வார்கள். எனவே இதயம் என்பது எதையெல்லாம் திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறதோ அதைக் கேட்கும்.அதற்கு மொழி இல்லை, திரும்பத்திரும்ப சொல்லப்படுகிற போது அது உள்ளே பதிந்து விடுகிறது.

எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ;
லாஇலாஹா இல்லல்லாஹ் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலமாக உங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுங்கள், உஙகள் இதயங்களை ஒளிமயமாக்கிக் கொள்ளுங்கள்,உங்கள் நாவுகளை அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வும் குர்ஆனில் சொல்கிறான் ;
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنْفَعُ الْمُؤْمِنِينَ

நீங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள், சொல்லிக் கொண்டே இருங்கள் ஏனென்றால்  இவ்வாறு ஞாபகப்படுத்துவது, உபதேசிப்பது முஃமின்களுக்கு பிரயோஜனம் அளிக்கும். [அல்குர்ஆன் : 51 ; 55]

ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்கிற போது ஏற்படுகிற மாற்றம் எதார்த்தமானது, இது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைமழை சோ.... என்று பெய்கிறது. அதனால் மிகப்பெரிய பாதிப்பை, பள்ளத்தை உண்டாக்க முடிவதில்லை, ஆனால் ஒரு குழாயிலிருந்து சொட்டு... சொட்டு என விழுந்து கொண்டே இருக்கும். விழுவது சொட்டு தான். ஆனால் தொடர்ந்து விழுவதினால் பாறையையும் கூட அது பள்ளமாக்கி விடும். இதை நாம் பார்க்கத் தான் செய்கிறோம்.

எனவே தான் குழந்தை பிறந்த உடனே குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் சொல்லப்படுகிறது. [சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது] புரியுமோ புரியாதோ, கவனிக்குமோ கவனிக்காதோ. ஆனால் குழந்தையின் ஆழ் மனது கேட்டுக் கொண்டிருக்கிறது, உள் மனது உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தக் காலத்து இஸ்லாமியத் தாய்மார்கள், குழந்தை அழுதால் அதை தொட்டிலில் போட்டு தாலாட்டும் பொழுது அல்லாஹ்வையும் ரசூலையும் ஞாபகப்படுத்துகிற, கலிமாவையும் ஸலவாத்தையும் மையப்படுத்துகிற தாலாட்டுப் பாடல்களைப் பாடி அதைத் தூங்க வைப்பார்கள். ஆழ் மனது கேட்டு அப்படியே தூங்கி போகும்.
அல்லாஹ்,ரசூலுடைய அந்த வார்த்தையை பிஞ்சாக இருந்த அந்த நேரத்தில் கேட்டது, அது பண்பட்ட குழந்தையாக வளர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

எனவே தான் விளம்பர மேதைகள் சொல்கிறார்கள் ; தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டே இரு! யாரும் கேட்க வில்லையே என்று கவலைப்படாதே! ஏனென்றால் உள் மனது கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.ஆள் மனது அதை ஏற்றுக் கொள்ளும் என்று அவர்களும் கூறுகிறார்கள். தொலைகாட்சியிலும் பத்திரிக்கை யிலும் விளம்பரங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. நாம் கவனிப்பதில்லை,பார்ப்பதில்லை ஆனாலும் திரும்பத் திரும்ப கண்ணிலே படுகிற போது அது ஒரு வகையான பாதிப்பை உண்டாக்காமல் விடுவதில்லை.

இது சர்வதேசப் பண்டம் என்று ஒரு பானத்தைத் தொடர்ந்து விளம்பரம் செய்த காரணத்தினால், அந்த நாட்டினுடைய பண்டம், பானம் என் நாட்டிற்கு வரக்கூடாது எனறு சொன்ன நாட்டிற்கும் அது போய் விட்டது என்று சொன்னால், அது விளம்பரத்தினுடைய யுக்தி மட்டுமல்ல திரும்பத் திரும்பச் சொல்வதினால் ஏற்படுகிற ஒரு சக்தி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜெர்மனுடைய சர்வாதிகாரி தன் சுய சரிதையில் ; பொய்யுக்கும் மெய்யிக்கும் அதிக வித்தியாசமில்லை. ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது. பொய்யை அது பொய்யென்று தெரியாத அளவிற்கு திரும்பத் திரும்ப சொன்னால் அது தான் மெய் என்று அவன் எழுதியிருந்தான்.

ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னாலே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று சொன்னால் மெய்யை, உண்மையைத் திரும்பத் திரும்ப சொல்கிற பொழுது அது மிகப் பெரிய குணத்தை உண்டாக்கும் என்பது யதார்த்தமானதும், பயனுள்ளதுமாகும்.

யூதர்கள் தான் இந்த உலகத்தினுடைய சீரழிவிற்குக் காரணம் என்பதை ஜெர்மன் நாட்டிலே கிட்டத்தட்ட 20 வருடம் தொடர்ந்து அவன் சொன்னான். அதை அந்த மக்கள் நம்பினார்கள். உலகில் புத்திசாலித்தனமானவர்கள் வாழ்ந்த நாடு ஜெர்மன். அந்த நாட்டிலே வாழ்ந்த மேதைகள் கூட நம்பினார்கள். ஏன்? திரும்பத் திரும்பச் சொன்ன காரணத்தினால் தான்.

எந்தளவிற்கு என்றால், ஒரு வேளை உலகத்தினுடைய சீரழிவிற்கு நாம் தான் காரணமாக இருப்போமோ! இல்லையென்றால் மேதை களெல்லாம் சொல்லுவார்களா? என்று யூதர்களே நினைக்கின்ற அளவிற்கு அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி மனதிலே பதிய வைத்தான் என்று பார்க்கிறோம்.

அதே போல் இன்று உலகத்திலே மீடியாக்கள் மூலமாக, ஊடகங்கள் வழியாக முஸ்லிம் பயங்கரவாதி என்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் இஸ்லாத்திற்கு எதிராக சொல்லிச் சொல்லி இறுதியில் சில இஸ்லாமிய சகோதரர்கள் கூட அப்படியிருக்குமோ! என்று நினைக்கும் அளவிற்கு அந்தப் பொய்யை திட்டமிட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு அறிஞன் சொல்வான் ; இஸ்லாம் தீவிரவாதம் என்று சொல்வது சூடான ஐஸ்கிரீம் என்று சொல்வதைப் போல. இஸ்லாம் என்றாலே சாந்தி, சமாதானம். எனவே இஸ்லாம் கூலானது. அது எப்படி சூடான தீவிரவாதமாகும்?

இஸ்லாம் எந்த அளவிற்கு மனித உயிரைப் பாதுகாக்கிறது, பாதுகாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது என்றால்;

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
ஒரு உயிரைக் கொலை செய்தால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தைக் கொலை செய்ததைப் போல.  ஒரு உயிரை உயிர் வாழ வைத்தால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் உயிர் வாழ வைத்ததைப் போல என்று குர்ஆன் [5 ; 32] சொல்கிறது. எனவே அது எப்படி தீவிரவாதமாக இருக்க முடியும்? என்று சிந்திக்க வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنْ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ

ஈமான் என்பது வெறும் வணக்கம் வழிபாடு என்பது மட்டுமல்ல. அதற்கு அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உண்டு. அதில் உயர்ந்தது லாஇலாஹா இல்லல்லாஹ். இது அதன் ஆரம்பமான கிளை. அடியிலே இருக்கக்கூடிய கிளை என்பது  பாதையில் யாருக்காவது இடர் அளிக்ககூடிய பொருள் இருந்தால் அதை அகற்றிப் போடுவது.  என்று அண்ணலம் பெருமானார் ரசுலே கரீம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். [முஸ்லிம்]

யாரோ போட்ட இடையூறு அளிக்கும் பொருளை,கல்லை,முல்லைக் கண்டால் ஒரு முஃமின் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சொல்லியிருக்கும் பொழுது எப்படி இஸ்லாம் கல்லை,குண்டைப் போடு என்று சொல்லும்?

முஃமின் என்றால் யார் என்பதற்கு விளக்கம் சொல்கிற பொழுது,  மக்கள் அவர்களுடைய உயிருக்கும், அவர்களுடைய பொருளுக்கும் யாரைக்கண்டு பயப்படாமல் இருப்பார்களோ அவர் தான் முஃமின். அவரைக்கண்டு ஜனங்கள் யாரும் பயப்படக்கூடாது, முஸ்லிம்கள் மட்டுமல்ல உலகமே அவரைக்கண்டு பயப்படக்கூடாது. இதோ முஸ்லிம் வருகிறார் இவரால் எந்த ஆபத்தும் வராது என்று யாரைக்கண்டு மக்கள் அச்சமற்று இருப்பார்களோ அவர் தான் முஃமின் என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.

பத்ரு போர்களத்திலே கைதிகளாக பிடிக்கப்பட்ட காஃபிர்களிலே சுஹைல் என்ற ஒரு காபிரும் இருந்தான். அந்த சுஹைல் எவ்வளவு கொடூரமானவன் தெரியுமா......? தீப்பொறிப் பேச்சாளன். அவனுடைய பேச்சிலே இஸ்லாத்திற்கெதிராக அனல் தெறிக்கும். அவனுடைய சொல்லாற்றல் இஸ்லாத்திற்கெதிராக ரொம்பவே பயன்பட்டிருந்தது, அவன் கைதியாக பிடிக்கப்பட்டு வந்திருக்கிறான். 

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ; யாரசூலல்லாஹ்!  அவனை என்னிடத்திலே ஒப்படையுங்கள் அவனது பல்லை உடைத்து அனுப்ப வேண்டும். ஏனென்றால் இனி மக்காவுக்கு அவன் திரும்பச் சென்று இஸ்லாத்திற்கெதிராகவும்,உங்களுக்கெதிராகவும் பேசக்கூடாது என்று சொன்ன பொழுது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்படி ஒரு வதையை நான் செய்யவே மாட்டேன். ஏனென்றால்,அல்லாஹ் என்னை அப்படி வதை செய்து விடுவானோ என்று நான் பயப்படுகிறேன் என்று கருணை நபி நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றால், இஸ்லாத்திற் கெதிராக செயல்பட்டவர்கள் கைதியாக பிடிக்கப்பட்டு வந்தாலும் கூட அவர்களையும் கூட வதை செய்யக்கூடாது என்று கற்று தந்த மார்க்கம். அது இஸ்லாமிய மார்க்கம், என்பதை நாம் இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டிய காலத்திலும் ஒரு கட்டாயத்திலும் நாம் இருக்கிறோம்.

அண்டை வீட்டுக்காரன் உன்னைக் கண்டு பயந்தால் நீ முஃமினல்ல, நீ முஃமினல்ல, நீ முஃமினல்ல என்று சொன்னார்கள் காரூண்ய நபி (ஸல்) அவர்கள். அண்டை வீடு என்றுச் சொன்னால் பக்கத்திலிருக்கும் வீடா? என்று கேட்கப்பட்டது. வலது புறம், இடது புறம், முன்பக்கம், பின் பக்கம் ஆகிய நான்கு புறத்திலும் இருக்கக்கூடிய 40 வீடுகள் அண்டை வீடுகள் என்ற அடை மொழிக்குள் வருகிறது என்று சர்தார் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். 

ஒரு ஸஹாபி, அந்த அண்டை வீட்டிலிருப்பவர்  அவர் யூதனாக இருந்தாலுமா?” என்று கேட்ட பொழுது யூதனாக இருந்தாலும் அவனுக்கு நீ தீங்கு செய்யக்கூடாது என்று போதித்த பெருமானார் (ஸல்) அவர்களை எப்படி தீவிரவாத சமுதாயத்தின் தலைவர் என்று சொல்ல முடியும்?

ஒரு சந்தர்ப்பத்தில் பூமான் நபி (ஸல்) அவர்கள் ரோட்டிலே சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு யூதர் நபியவர்களது துண்டைப் பிடித்து இழுத்தார், சட்டையைப் பிடித்து முறுக்கினார். வாங்கிய கடனைத் திருப்பித்தரத் தெரியாதோ...? அப்துல் முத்தலிபுடைய பிள்ளைகளுக்கெல்லாம் இந்த புத்தி தானோ? என்று நடு ரோட்டிலே வைத்து நாலு பேருக்கு முன்பாக கேவலப்படுத்தும் படி உணர்ச்சியைத் தூண்டி பேசினார். 

மதினாவிலே இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராக இருக்கிற சமயத்திலே ஒரு யூதர் இப்படி செய்த பொழுது அருகில் இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) இப்படிச் செய்யாதே யாரைப் பிடித்து எச்சரிக்கை செய்தாய்!” என்று திருப்பி அவரை எச்சரிக்கை செய்து கைகலப்பு ஏற்பட்டு விடும் என்ற கட்டத்திற்கு வந்த பொழுது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே உமர் (ரலி) அவர்களை அழைத்துச் சொன்னார்கள் ;

உமரே நானும் அவரும் இதைவிட வேறு ஒன்றின் பக்கம் உங்களின் பால் தேவை உடையவராக இருக்கிறோம். நீர் இப்படி செய்யக் கூடாது. நீர் என்ன செய்ய வேண்டும் என்றால், கடன் வாங்கியிருக் கிறீர்களே அதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் நல்லதுதானே என்று என்னிடத்தில் சொல்ல வேண்டும், சரி கடன் கொடுத்திருக்கிறாய். மென்மையாக, ஒழுங்காக கேட்டு வாங்கக் கூடாதாப்பா இப்படியா முரட்டுத் தனமாக நடந்து கொள்வது? என்று அவரிடத்தில் சொல்ல வேண்டும்.

கடன் திருப்பிச் செலுத்துவதற்குறிய தவணை முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அவர் அநியாயமாகத்தான் நடந்திருக்கிறார். ஆனாலும் கூட அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படி தயவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சொன்னதோடு மட்டுமல்லாமல் இன்ன ஆளிடத்திலே பேரித்தம் பழங்கள் இருக்கிறது. அதை வாங்கிக் கடனை அடைத்து விடுங்கள். மட்டுமல்ல அவர் என்னிடம் கடனைத் திருப்பிக் கேட்டதற்காக நீர் அவரோடு சண்டைக்கு போனீர் அல்லவா அதற்காக 20 ஸாஃ [40 கிலோகூடுதலாகக் கொடுங்கள் என்று சொல்லி மென்மையை போதித்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்க்கிறோம். 

எனவே இதுமாதிரியான செய்திகளின் வழியாக இஸ்லாம் தீவிரவாதமோ பயங்கரவாதமோ அல்ல என்பதை இந்த உலகத்திற்குச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

ஒரு நபித் தோழர் கேட்டார் : ஒரு மனிதன் தன் இனத்தை விரும்புவது இனவாதமா?அது தீவிரவாதமாஒரு மனிதன் தன் சமூகத்தை விரும்புவது இனவாதமோ தீவிரவாதமோ அல்ல மாறாக தன் இனம் என்று வந்த பிறகு அநியாயத்திற்காக நீ அவனுக்கு உதவி செய்வது, அவனுடைய போக்கு சரியில்லை, அவனுடைய வாதம் சரியில்லை அவன் அநியாயத்தில் இருக்கிறான் என தெரிந்தும் நீ அவனுக்கு உதவி செய்வது தான் இனவாதம். அது தான் தீவிரவாதம் என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

யார் அநியாயம் செய்தாலும் அநியாயம் தான். நான் செய்தாலும் அது யார் செய்தாலும் அநியாயம் அநியாயம் தான். தவறு தவறு தான். நான் செய்தால் அது தவறில்லை,அநியாயம் இல்லை என்று நிச்சயமாக ஆகிவிடாது.

ஒரு விஷயத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். என்றைக்கும் தீவிரவாதம் எடுபடவே எடுபடாது. மென்மை தான் எடுபடும். 

ஒரு குரு கடைசி காலத்தினுடைய மரணப் படுக்கையில் படுத்துக்கிடந்தார். அவரைக் காண்பதற்கு அவருடைய இளம் சீடன் வந்தான். குருவே எனக்கு உபதேசம் செய்யுங்கள் என அவன் கேட்டபொழுது, அந்த குரு சீடனைப் பார்த்து  எனக்கு பல் இருக்கிறதாஎனக் கேட்டார். பார்த்த பொழுது பல் இல்லை. நாக்கு இருக்கிறதாநாக்கு இருக்கிறது. எனவே என்ன விளங்கிங் கொண்டாய்பல் அது வன்முறையானதுஎனவே அது உடைந்து விட்டதுநாக்கு அது மென்மையானதுஎனவே நீடித்திருக்கிறது.
 வன்முறை நீடிக்காதுமென்மை தான் நீடிக்கும் என்றார். நீ இந்த உலகத்தின் பாதி தத்துவங்களை விளங்கிக் கொண்டாய். அதனால் உனக்கு உபதேசம் தேவையில்லை" என்று அந்த சீடனைப் பாராட்டினார்.

ஆனாலும் கூட தீவிரவாதம் ஏன் ஏற்படுகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.ஒரு சமூகம் தொடர்ந்து தாக்கப்படுகிறபோது அதற்கான உரிமைகள் மறுக்கப்படுகிறபோது தொடர்ந்து அவர்கள் சிறுமைப் படுத்தப் படுகிறபோது அவர்கள் சீறி எழுகிறார்கள்; பொங்கிப் பாய்கிறார்கள். இது தவிர்க்க முடியாத தாகவும் ஆகிவிடுகிறது.

குளவி மண் புழுவை எடுத்து வைத்து கொட்டிக்கொண்டே இருக்கும். நாளடைவில் அந்த மண் புழு குளவியாக மாறிவிடும் என்பதையும் இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கொட்டப்படும் சமுதாயம்தான் கொதித்து எழுகிறது. தீவிரவாதத்தை விட அதைத் திணிப்பதுதான்  தான் மிகப்பெரிய குற்றம்.

எந்த வகையில் அநியாயம் நடந்தாலும் அதை எதிர்க்கிற சக்தியாக நாம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மார்க்கம் சத்திய மார்க்கம் இஸ்லாம் என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டிய ஒரு கடமையும் ஒரு கடப்பாடும் நமக்கு இருக்கிறது. இஸ்லாம் சமாதானத்தை விரும்பும் சத்திய மார்க்கம் என்பதை நாம் திரும்பத் திரும்ப நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். 

குறிப்பாக நமக்கு நாமே சொல்லிக்கொள்ளவேண்டும். இது பயனுள்ள நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படி உண்மையைத் தொடர்ந்து உரைத்துக்கொண்டே இருப்பது உள்ளத்திற்கு நல்ல உரமாக அது அமையும். இந்த வகையில்தான் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்

ஏனெனில் அடிக்க அடிக்க அம்மியும் நகரும்! உருக உருக கல்லும் கரையும்!!


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks