Thursday 31 March 2016

இரண வாசல்


காலைக்கதிர் தொகுப்பு
عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه و سلم : ما من مؤمن إلا وله بابان باب يصعد منه عمله وباب ينزل منه رزقه فإذا مات بكيا عليه فذلك قوله عز 
و جل فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين

அருமை  நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
ஒவ்வொரு முஃமினுக்கும் இரண்டு வாசல்கள் இருக்கின்றது. ஒரு வாசல் வழியாக அவன் செய்யக்கூடிய நல்ல அமல்கள் மேலே உயர்கிறது. இன்னொரு வாசல் வழியாக அவனுக்கு ரிஸ்க் இறங்கிக் கொண்டிருக்கிறது.அந்த முஃமின் இறந்து விட்டால் இந்த இரு வாசல்களும் அழுகின்றன. (ஹதீஸ் : நூல் ;  திர்மிதி)

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.


فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ

ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை; (தப்பித்துக் கொள்ள) அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை. (அல்குர்ஆன் ; 44:29) 

இந்த வசனம் ஃபிர்அவன் மற்றும் அவனோடு மரணித்தவர்களின் விஷயத்தில் இறங்கியது.அவர்களுக்கு வானம் அழவில்லை என்பதிலிருந்து அவர்களல்லாத நல்லவர்கள்,நாதாக்கள்  இறந்து போகும் போது அவர்களுக்காக வானம் அழும் என்பது தெரிகிறது. இதைத்தான் இந்த நபிமொழியும் உறுதி செய்கிறது.

முஃமின்களுக்கு அல்லாஹ் இரண்டு வாசல்களை பிரத்தியேகமாக ஏற்படுத்தி இருக்கிறான். ஒன்று  அதன் வழியாக அவன் செய்த அமல்கள் மேலே உயர்கின்றது.

مَن كَانَ يُرِيدُ الْعِزَّةَ فَلِلَّهِ الْعِزَّةُ جَمِيعًا ۚ إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهُ ۚ وَالَّذِينَ يَمْكُرُونَ السَّيِّئَاتِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۖ وَمَكْرُ أُولَٰئِكَ هُوَ يَبُورُ

எவன் இஸ்ஸத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமல் அதை உயர்த்துகிறது; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்ய சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை யுண்டு - இன்னும் அவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும். (அல்குர்ஆன் ; 35:10)

இன்னொரு வாசல் வழியாக நமக்கு ரிஸ்க் இறங்கிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய ரிஸ்க் என்பது நம்முடைய அமலைப் பார்த்து இறங்குவதில்லை என்றாலும், முஃமின்களுக்கு அல்லாஹ் பிரியமாக அந்த ரிஸ்கை இறக்குகிறான்.

இரவில் நமது அமலைக் கண்காணித்து கொண்டிருக்கும் மலக்கு அதிகாலையில் அல்லாஹ்விடத்தில் நமது பாவத்தின் பட்டோலையை சமர்ப்பிக்கின்றார்.எந்த மலக்கு நமது பாவங்களை பதிவு செய்து அல்லாஹ்விடம் சமர்ப்பித்தாரோ அதே மலக்கின் வழியாகத்தான் நமக்கான ரிஸ்கையும் வழங்குகிறான்.

அல்லாஹ் மிகவும் கருணையாளன், இரக்கமுடையவனாக இருக்கிறான்.
இந்த உலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் ரிஸ்க் இறங்குகிறது. அதில் குறிப்பாக முஃமின்களுக்கு அல்லாஹ்வினுடைய அன்போடும் அருளோடும் இறங்குகிறது என்ற நம்பிக்கை நம்மிடம் வர வேண்டும்.
இந்த நம்பிக்கை வந்து விட்டால் அல்லாஹ்வுடைய ரிஸ்கை ஆவலோடும் உற்சாகத்தோடும் அதைப் பெறுவதற்கு  நாம் முயற்சிப் போம்.மேலும் ஹலாலான வழியில் அதைத் தேடுவோம்.ஹராமான வழியில் நாம் தேட மாட்டோம்.அவ்வாறே ஹராமான வழியில் அதை நாம் செலவு செய்யவும் மாட்டோம்.

அல்லாமா இஸ்மஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் ; 
அன்றொரு நாள் நான் பஸராவிலிருக்கும் ஜாமிஆ மஸ்ஜிதில் தொழுது விட்டு திரும்பினேன். வரும் வழியில் ஒரு கிராமவாசியை சந்தித்தேன். ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் வாளும், வில்லும், அம்பும் இருந்தது. என்னிடம் நீ யார் எனக் கேட்டார். நான் இஸ்மஈ கோத்திரத்தை சார்ந்தவன் என்றேன். ஓ.... நீ தான் இஸ்மஈயா...எனக் கேட்டார். ஆம் என்றேன். எங்கிருந்து வருகிறாய்? எனக் கேட்டார். ரஹ்மானுடைய கலாம் ஓதப்படும் இடத்திலிருந்து வருகிறேன் என்றேன். இதைக் கேட்ட அவர், ரஹ்மானுக்கு ஓதப்படும் கலாமும் இருக்கிறதா....? எங்கே கொஞ்சம் ஓதிக்காட்டு என்றார்.

وَالذَّارِيَاتِ ذَرْوًا

 (புழுதியை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக! என்று தொடங்கும் அந்த சூராவை ஓதிக் கொண்டே வந்தேன். ரசித்துக் கேட்டுக் கொண்டே வந்தார்.(அல்குர்ஆன் : 51;1)

وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَ

அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப்பட்டவையும் இருக்கின்றன (51:22) என்ற வசனத்தை நான் ஓதிய போது..... போதும் என்று சொல்லி விட்டார். தான் வைத்திருந்த ஒட்டகத்தை அறுத்து அங்கு வந்தோர் எல்லோருக்கும் பங்கு வைத்துக் கொடுத்தார், வானத்தில் எனக்கான ரிஸ்க் இருக்கும் போது எனக்கு எதற்கு இவைகள் எனக் கூறி தான் வைத்திருந்த அம்பையும் வில்லையும் ஒடித்து விட்டு வெறும் கையோடு காட்டுக்குள் சென்று விட்டார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கலீபா ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்களோடு நான் ஹஜ்ஜிக்கு சென்ற போது கஃபாவின் திரைச்சீலையை பிடித்தபடி மெல்லிய குரலில் துஆ ஓதும் சப்தம் கேட்டது. இத நமக்கு பரிச்சயமான எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே எனப் பார்த்த போது, அன்று அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு காட்டுக்குள் போன மனிதர் அங்கு இருந்தார். அப்போது அவரின் தோற்றம் மஞ்சள் நிறம் படிந்து மெலிந்திருந்தார்.அவரும் என்னைப் பார்த்தார். இருவரும் சந்தித்துக் கொண்டோம்.

இன்னும் அல்லாஹ்வினுடைய கலாம் ஏதாவது இருக்கிறதா? எனக் கேட்டார். நான் மீண்டும் அதே வசனத்தை ஓதினேன். இதைக் கேட்ட அவர், நான் அதை பெற்றுக் கொண்டேன். வானத்திலிருந்து அல்லாஹ் உணவு இறக்குகிறான் என்பதை கண் கூடாக அனுபவத்திலேயே பார்த்து விட்டேன். வேறு ஏதாவது ஓதுங்கள் எனக் கேட்டார். நான் அதற்கு அடுத்த வசனத்தை ஓதினேன்.

فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِّثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ

ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும் (51:23)

இந்த வசனத்தைக் கேட்டதும் அவருக்கு கோபம் வந்து விட்டது. அல்லாஹ்வை சத்தியம் செய்ய வைத்தவன் யார்...? எனக் கோபமாக கேட்டார். நான் புரியாமல் யாரை சொல்கிறீர்கள்?  எனக் கேட்டேன்.
சொல்வதை மறுத்தால் தானே சத்தியம் செய்து அதை அழுத்தமாக சொல்ல வேண்டியது வரும்.அல்லாஹ் சொல்வதை எவன் மறுத்தான் ? அல்லாஹ் சொல்வதை மறுக்கக்கூடிய தைரியம் எவனுக்கு வந்தது ? எவன் மறுத்து அல்லாஹ்வை சத்தியம் செய்ய வைத்தான் ? அல்லாஹ்வை இவ்வாறு சத்தியம் செய்து சொல்ல வைத்து விட்டானே..! என்று அல்லாஹ்வின் மீதுள்ள தனது பிரியத்தையும், தன் தொடர்பையும் அழுத்தமாக வெளிப்படுத்தினார். பின்பு இதே வார்த்தை யை திரும்பத் திரும்ப கூறியவாறே மயக்கமுற்று கீழே விழுந்து இறந்து விட்டார்.

வானத்திலிருந்து அல்லாஹ்வினுடைய ரிஸ்க் பூமியில் இறங்கி விளைச்சல் போன்றவற்றின் வழியாக பல்வேறு வகைகளில் பயன் தந்து கொண்டிருக்கின்றன.நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லை யோ ஆனால் ரிஸ்க் என்பது இறங்கிக் கொண்டே இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களை சந்திக்க எமன் நாட்டைச் சேர்ந்த அஷ்அரிய்யா கோத்திரத்தார் வந்திருந்தார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக மதினாவில் தங்கியிருந்தார்கள். இந்நிலையில் கொண்டு வந்த உணவும் காலியாகி விட்டது. நபியவர்களிடம் கேட்டால் ஏதாவது உணவு கிடைக்கும் என்று அவர்கள், ஒருவரை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வரும்படி அனுப்பினார்கள்.

அவர் நபியவர்களின் சபைக்கு அருகில் வந்த போது உள்ளே இருந்து திருக்குர்ஆன் வசனத்தின் வரிகள் அவரின் காதில் விழுந்தது.

وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ

இன்னும், உணவளிக்க  அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன. (11:6)

இந்த வசனத்தைக் கேட்டதும் இந்த உலகத்திலிருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கும் பொறுப்ப அல்லாஹ் ஏற்றிருக்கும் போது அந்த உயிரினங்களை விடவா இந்த அஷ்அரிய்யா கோத்திரத்தார் கேவலமாக போய் விட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் நமக்கு உணவளிப்பான் என்று நபியவர்களிடம் கேட்காமல் திரும்பிச் சென்று விட்டார்.

தனது கூட்டத்தாரிடம் வந்து சந்தோஷம்...... சந்தோஷம்..... நற்ச்செய்தி அல்லாஹ் நமக்கு உணவு தருவான் எதிர்பாருங்கள் எனக்கூறினார். கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உணவு அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள் என விளங்கிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் ஒரு மனிதர் பெரிய தட்டில் நிறைய ரொட்டியும் கறியும் கொண்டு வந்து தந்தார். அதை எங்கள் கூட்டத்தினர் அனைவரும் சாப்பிட்டது போக மீதமும் இருந்தது. இதை நபியவர்களுக்கே அனுப்பினால் இன்னும் சாப்பிடாத மற்றவர்களுக்கு அதை அனுப்புவார்கள் என்று அந்த உணவை நபியவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

நபியவர்களிடம் உணவு தட்டைக் கொடுத்து விட்டு கொண்டு வந்த தோழர்கள் நபியவர்களிடம் சொன்னார்கள்; யாரசூலல்லாஹ் நீங்கள் அனுப்பிய உணவைப் போன்ற ஒரு ருசியான,தூய்மையான உணவை எங்கள் வாழ்நாளில் நாங்கள் சாப்பிட்டதே இல்லை என்றார்கள். இதை கேட்ட நபி (ஸல்) நான் உங்களுக்கு உணவு அனுப்பவில்லையே என்றாரகள்.

உங்களிடம் உணவு கேட்டு வரும்படி எங்களில் ஒருவரை நாங்கள் அனுப்பினோம் அவர் எங்களிடம் அல்லாஹ் அனுப்புவான் எனக்கூறினார். சிறிது நேரத்தில் உணவும் வந்தது. நாங்கள், நீங்கள் அனுப்பியதாக விளங்கிக் கொண்டோம் என்றார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் இது, அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய ரிஸ்க் என்று கூறினார்கள்.

நபி ஈஸா (அலை) அவர்களின் கூட்டத்தினரான ஹவாரிய்யீன்கள் வானத்திலிருந்து உணவுத்தட்டை இறக்கி வைக்கும்படி அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றார்கள்.ஆனால் அல்லாஹ்வின் வசனத்தின் மீது நம்பிக்கை வைத்ததின் காரணத்தினால் நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே வானத்திலிருந்து உணவை இறக்கி வைத்தான்.இந்த உம்மத்தின் சிறப்பை இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்கிறோம்.

நாமும் அந்த ஸஹாபாக்களைப் போன்று நம்பிக்கையோடு அல்லாஹ்விடம் ரிஸ்கைத் தேடினால் அல்லாஹ் எல்லா வகைகளிலும் ரிஸ்கைத் தருவான்.ஆனால் அந்த மனோதடமும் அந்த ஈமானுடைய பலமும் உள்ளவர்களுக்கு மட்டும் அவர்கள் தேடாமலேயே அல்லாஹ்வின் புறத்திலிருந்து ரிஸ்க் கிடைக்கும்.அந்தப் படித்தரத்தில் இல்லாத சாதாரண முஃமின்கள் அந்த ரிஸ்கை அல்லாஹ்விடம் கேட்பதோடு அதற்காக முயற்சிக்கவும் வேண்டும்.

வானத்தில் மனிதனுக்காக ரிஸ்க் இறங்கக் கூடிய வாசலும், நாம் அமல் செய்தால் அது மேலே செல்வதற்கென்று ஒரு வாசலும் இருக்கிறது. எப்போது அந்த முஃமின் இறந்து விடுகிறனோ அப்போது அந்த இரு வாசல்களும் அழுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த அழுகை முஃமின்களுக்கு மட்டும் தான் சாத்தியமாகும். அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்களுக்கு வானமும் அழாது பூமியும் அழாது.

#வானத்திற்கும், பூமிக்கும் அல்லாஹ்வை நேசித்தவர்கள் யார்...? அல்லாஹ்வை வணங்கியவர்கள் யார்...? என நன்கு தெரியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ஒரு முஅத்தின் பாங்கு சொன்னால் அந்த சப்தத்தை கேட்க கூடிய ஜின், மரம், கல் என்று அனைத்தும் நாளை மறுமையில் அவருக்காக சாட்சி சொல்லும் என்றார்கள்.

அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் ;
ஒருவர் ஒரு இடத்தில் வழமையாக தொழுது வந்து பின்னர் அவர் இறந்து விட்டால் அவருக்காக அந்த இடம் அழும் என்றார்கள்.
நாம் ஒரு பள்ளிவாசலுக்கு தொழ வந்து கொண்டிருந்தோம் என்றால், நாம் வராத நாட்களில் அந்த பள்ளிவாசல் நம்மைத் தேடும். அல்லாஹ் அதற்கான அறிவையும் தெளிவையும் அவைகளுக்கு கொடுத்திருக் கின்றான்.

உலகில் நல்லோர்கள் வாழும் காலத்தில் அவர்களின் இபாதத் - வணக்க வழிபாட்டின் காரணமாக வானத்திலிருந்து அல்லாஹ் வினுடைய ரஹ்மத் இறங்குகிறது. அவர்கள் மரணிக்கும் போது அந்த ரஹ்மத் நின்று விடுகிறது அதன் காரணமாக அவைகள் அழுகின்றன.

இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முஃமின் இறந்து விட்டால் நாற்பது நாட்கள் வரை அவருக்காக வானமும் பூமியும் அழுகின்றது.

ஆகவே நாம் ஒரு மனிதர் இறந்து விட்டால் நாமும் அவருக்காக வேண்டி குறைந்தது நாற்பது நாட்கள் வரைக்கும் அவருக்காக ஃபாத்திஹா ஓதி துஆ செய்து நாற்பதாவது நாளில் விஷேசமாக துஆ செய்து அவருக்கு  செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கின்றோம். இது ஒரு முஃமினுக்காக நாம் செய்ய வேண்டிய காணிக்கையின் வெளிப்பாடு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்கிறோம்.

இவ்வுலகில் இருக்கும் எல்லா வஸ்துக்களுக்கும் அல்லாஹ்வையும் அல்லாஹ்வை வணங்கக் கூடியவர்களையும் நன்கு தெரியும். அவருக்காக வேண்டி பாவமன்னிப்பும் துஆவும் செய்கிறது என்பது போன்ற பல ஹதீஸ்களைக் காண்கின்றோம்.

நாம் அமல் செய்தாலும் செய்யாவிட்டாலும் அல்லாஹ்வினுடைய அருள் நமக்காக இறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் தான் அமலைக் குறைத்து பாவம் செய்வதின் காரணமாக அந்த அருளை குறைத்துக் கொள்கிறோம்.


நம்மை எப்போதும் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய அல்லாஹ்வை நாம் மறந்து விடாமல் அவனை வணங்கி வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

5 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் பயனுள்ள பல தகவல்களின் கலஞ்சியம்

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ் பயனுள்ள பல தகவல்களின் கலஞ்சியம்

    ReplyDelete
  3. இன்று ஒரு தகவல்
    மிகவும் அருமையாக உள்ளது
    தொடர்ந்து வெளியிட்டால் பிரயோஜனமாக அமையும்

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ்... நல்ல பயள்ள தகவல்கள்

    ReplyDelete
  5. அல்ஹம்து லில்லாஹ்... நல்ல பயள்ள தகவல்கள்

    ReplyDelete

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks