Thursday, 21 April 2016

மரபணு தொடர்ச்சிக்கு ஒரு ஆதாரம்

ஆதம் (அலை) அவர்கள் மறந்தார்கள்,அவர்களது பிள்ளைகளும் மறக்கிறார்கள்.
ஆதம் (அலை) அவர்கள் மறுத்தார்கள்,அவர்களது பிள்ளைகளும் மறுக்கிறார்கள்.
ஹவ்வா (அலை) அவர்கள் கணவனுக்கு மாறு செய்தார்கள்,அவர்களது பிள்ளைகளும் மாறு செய்கிறார்கள்.

عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال :" لولا بنو إسرائيـل لم يخبث الطعام ولم يخنـز اللحم ولولا حواء لم تخن أنثى زوجها الدهر                             "

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; பனூஇஸ்ரவேலர்கள் இல்லாம லிருந்தால் உணவு, இறைச்சி கெட்டுப் போயிருக்காது. ஹவ்வா (அலை) அவர்கள் தனது கணவருக்கு மாறு செய்யாமல் இருந்திருந்தால் இந்த உலகில் எந்த பெண்மணியும் தன் கணவனுக்கு மாறு செய்யாமல் இருந்திருப்பார்கள். நூல் - புகாரி, முஸ்லிம்.

இந்த ஹதீஸின் வாயிலாக நபி (ஸல்) அவர்கள் ஒரு வரலாற்றை நினைவுபடுத்தி அதன் மூலம் இவ்வுலக மக்களுக்கு ஒரு  தத்துவத்தை எடுத்துச் சொல்கிறார்கள்.

இஸ்ரவேலர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் உணவு, இறைச்சி கெட்டுப் போயிருக்காது என்பதன் விளக்கம் என்னவென்றால், இன்று நாம் உணவு சமைத்தால் சில மணி  நேரம் கழிந்து அது கெட்டுப் போய் உபயோகிக்க தகுதியற்றதாக மாறிவிடுகிறது.

இந்நிலை ஆரம்ப காலத்தில் இல்லாமலிருந்தது. பின்னால் வந்த யூதர்களின் வரம்பு மீறுதலின் காரணமாக இந்த நிலை உருவானது. இவ்வுலகில் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளுக்கும் இழப்புக்களுக்கும் யூதர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள்.

நபி மூஸா (அலை) அவர்கள் தங்கள் சமுதாய மக்களான யூதர்களிடம் பைத்துல் முகத்தஸை வென்று கைப்பற்றலாம் வாருங்கள் என்ற போது நீங்களும் உங்கள் அல்லாஹ்வும் சென்று போர் செய்யுங்கள், நாங்கள் வரவில்லை இங்கேயே தங்குகிறோம் என்று  மூஸா (அலை) அவர்களை எதிர்த்துப் பேசினார்கள்.அல்லாஹ்வின் உத்தரவை ஏற்க மறுத்தார்கள். அல்லாஹ் அவர்களை தீஹ் என்று சொல்லப்படும் எவ்வித வசதியும் இல்லாத வெட்ட வெளியில் தங்க வைத்தான்.

இருந்தும் நபியோடு அந்த மக்கள் இருந்த காரணத்தால் அல்லாஹ் அவர்களுக்கு சில சௌகரீகங்களை செய்து கொடுத்தான். சுவனத்து உணவான மன்னு ஸல்வா என்ற உயர்தர உணவை அவர்களுக்கு இறக்கிக் கொண்டே இருந்தான். தினமும் நான் உங்களுக்கு உணவைத் தருவேன்.எனவே யாரும் சேமித்து வைக்க வேண்டான் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். ஆனால் அந்த இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் மேல் அவநம்பிக்கை கொண்டு நாளை உணவு வராமல் போய் விட்டால் என்ன செய்வது என்று எண்ணி உணவை சேமித்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தார்கள். இதன் காரணமாக அல்லாஹ் உணவை கெட்டுப் போகும் தன்மைக்கு மாற்றினான். அதன் பிறகு தான் உலகில் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகத் துவங்கியது.இதைத்தான் அந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உணவுக்கு மட்டும் கெட்டுப் போகும் தன்மை இல்லையென்றால் பணக்காரர்கள் உணவை யாருக்கும் கொடுக்காமல் அவர்களே எடுத்து வைத்து பல நாட்கள் சாப்பிடுவார்கள். ஆகையால் தான் உணவிற்கு இந்தத் தன்மையை அல்லாஹ் கொடுத்தான் என்பதாக முந்தைய வேதங்களில் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் பார்க்கிறோம். முன்னால் ஒரு காலம் இருந்தது.வீட்டில் கறி சமைத்தால் தன் அண்டை வீட்டாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பழக்கம் இருந்தது.இது தான் இஸ்லாமியப் பண்பாடு. நபி (ஸல்) அவர்கள், சால்னா வைத்தால் அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்தி அண்டை வீட்டாருக்கும் பகிர்ந்து உண்ணுங்கள் என்றார்கள்.

ஆனால் இன்று ருசியாக இருக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சமாக கெட்டியாக ஆக்கி நாம் மட்டும் உண்ணும் பழக்கம் இருக்கிறது.அப்படியே அதிகமாக இருந்தாலும் மீதமான உணவை ஃபிரிட்ஜில் எடுத்து வைத்து அதை சூடாக்கி சூடாக்கி நாமே தான் அதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர பிறருக்குக் கொடுப்பதில்லை.பிறருக்குக் கொடுத்துதவ வேண்டும் என்ற எண்ணமும் அந்தப் பழக்கமும் நம்மை விட்டும் அகன்று விட்டது.அந்த வேதத்தின் செய்தி மிகவும் உண்மையானது என்பதை இன்றைய நமது  நடைமுறை உணர்த்துகிறது.

அன்று இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் மீது அவநம்பிக்கை கொண்ட  காரணமாக அல்லாஹ்வின் நிஃமத்துகளை இழந்தது போல இன்று நாமும் நம்முடைய பல்வேறு விதமான நிஃமத்துகளை நமது அவநம்பிக்கையின் காரணமாக இழந்து வருகிறோம்.

பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் என்பது ஒரு வரம்.அது சாபமல்ல. மாதவிடாய் வருவது தான் பெண் ஆரோக்கியாக இருக்கிறாள் என்பதற்கு அடையாளம்.மட்டுமல்ல மாதவிடாய் என்பது தாய்மைப்பேற்றை  அடைவதற்கு, குழந்தை பெறுவதற்கு மிகமிக அடிப்படையான முக்கிய மான மூலக்காரணியாகும். எந்த வயது வரை ஒரு பெண்ணுக்கு மாத விடாய் வருகிறதோ அதுவரை தான் அந்தப் பெண்ணால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த மாதவிடாய் என்பது ஹவ்வா (அலை) அவர்கள் முதல் இருந்தது. அவர்களுக்கு அது அருளாகத்தான் இருந்தது. அதாவது, அரிதாக என்றாவது ஒரு நாள் தான் வரக்கூடியதாக இருந்தது. ஆனால் பின்னால் இஸ்ரவேலர்களின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் பள்ளி வாசல்களுக்கு வந்து தொழுகையின் போது ஆண்களின் உடல் அழகை ரசித்து மோகத்தோடு பார்த்துக் கொண்டும், கேலி செய்து கொண்டும் இருந்த காரணத்தால் அவர்களை பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டில் இருக்க வைப்பதற்காக அந்த உதிரப் போக்கை அல்லாஹ் இன்னும் அதிகமாக ஆக்கி அவர்களின் உடலில் ஒரு விதமான சோர்வையும் கஷ்டத்தையும் உண்டாக்கினான்.

நபி மூஸா (அலை) அவர்கள் பனுஇஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு நைல் நதியைக் கடந்த பின்னர் அவர்களைப் பிடிப்பதற்காக வந்த ஃபிர்அவ்னை அல்லாஹ் அந்த நதியில் மூழ்கடித்தான். அவன் இறந்து விட்டான் என்று மூஸா (அலை) அவர்கள் சொன்ன போது இஸ்ரவேலர்கள் நம்ப மறுத்தார்கள். இறந்த அவனது சடலத்தைப் பார்த்தால் தான் நாங்கள் நம்புவோம் என்று பிடிவாதமாக கூறிய போது, அல்லாஹ் ஃபிர்அவ்னின் பிணத்தை தண்ணீரின் மேலாக மிதக்கச் செய்தான். அதுவரை உலகில் இறந்த சடலங்கள் தண்ணீரில் மிதக்கும் தன்மையற்றதாக இருந்தது. அந்த நிகழ்விற்குப் பின்பு சடலங்களுக்கு மிதக்கும் தன்மை ஏற்பட்டது என்று தஃப்ஸீர்களில் காணப்படுகிறது.

இது போன்ற எத்தனையோ விசயங்கள் பனூ இஸ்ரவேலர்களின் அழிச்சாட்டியத்தின் காரணமாக உலகில் அது மாற்றத்திற்குள்ளானது என்பது வரலாற்றின் வாயிலாக தெரிய வருகிறது.

நபி ஆதம் (அலை) அவர்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு இப்லீஸ் தான் மூலக் காரணம் என்றாலும், அவன் வழிகெடுப்பதற்கு ஹவ்வா (அலை) அவர்களைப் பயன்படுத்தினான்.  பெண்கள் விரைவில் ஏமாந்து விடுவார்கள். இப்லீஸின் சூழ்ச்சியின் காரணமாக அன்னை ஹவ்வா (அலை) அவர்கள் தன் கணவருக்கு மாறு செய்தார்கள். அன்று அவர்கள் கணவருக்கு மாறு செய்த காரணமாக அதன் பின்பு வந்து எல்லாப் பெண்களும் மாறு செய்யும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.கணவனுக்கு மாறு செய்யும் அந்த மரபணு அன்று முதல் தொடங்கி தொடர்கிற ஒரு பண்பாக அது இருக்கிறது.

ஏனென்றால் ஆதம் (அலை) அவர்களிடம் எந்த விதமான செயல்பாடுகள், பண்பாடுகள் இருந்ததோ அது அவர்களின் பிள்ளைகளில் ஆண்களிடம் வெளிப்படும். ஹவ்வா (அலை) அவர்களிடம் எந்த விதமான  செயல் பாடுகள்,பண்பாடுகள் இருந்ததோ அது அவர்களின் பிள்ளைகளில் பெண்களிடத்தில் வெளிப்படும்.

عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم : لما خلق الله آدم مسح ظهره فسقط من ظهره كل نسمة هو خالقها من ذريته إلى يوم القيامة وجعل بين عيني كل إنسان منهم وبيصا من نور ثم عرضهم على آدم فقال : أي رب من هؤلاء ؟ قال : هؤلاء ذريتك فرأى رجلا منهم فأعجبه وبيص ما بين عينيه فقال : أي رب من هذا ؟ فقال : هذا رجل من آخر الأمم من ذريتك يقال له داود فقال : رب كم جعلت عمره ؟ قال ستين سنة قال : أي رب زده من عمري أربعين سنة فلما قضى عمر آدم جاءه ملك الموت فقال : أو لم يبق من عمري أربعون سنة ؟ قال : أو لم تعطها ابنك داود ؟ قال : فجحد آدم فجحدت ذريته ونسي آدم فنسيت ذريته وخطئ آدم فخطئت ذريته

ஆதம் (அலை) அவர்களுக்கு கியாமத் நாள் வரை பிறக்கப் போகின்ற அவர்களின் குழந்தைகளின் அத்தனை ஆன்மாக்களையும் துகள்களின் வடிவத்தில் அல்லாஹ் வெளியாக்கி காட்டினான். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் அவர்களைக் கவரும் விதத்தில் ஒரு ஆன்மாவின் நெற்றி ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஆதம் (அலை) அவர்கள், இவர் யார் ? எனக்  கேட்டார்கள்...இவர் உங்களின் சந்ததிகளில் தோன்றக்கூடிய தாவூத் (அலை) அவர்கள் என்று பதிலளிக் கப்பட்டது. அவருக்கு எவ்வளவு ஆயுள் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்டார்கள். 60 வயது என்று சொல்லப்பட்டது. அப்போது ஆதம் (அலை) அவர்கள், என்னுடைய  வயதிலிருந்து 40 வயதை அவருக்குக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.

ஆதம் (அலை) அவர்களுக்கு 960 வயதான போது அவர்களின் உயிரைக் கைப்பற்ற இஸ்ராயீல் (அலை) அவர்கள் வந்த போது ஆதம் (அலை) அவர்கள், எனக்கு இன்னும் 40 வயது மீதம் இருக்கிறதே. ஏன் அதற்குள் எனது உயிரைக் கைப்பற்ற வந்திருக்கிறீர்கள் எனக் கேட்டார்கள். அப்போது இஸ்ராயீல் (அலை) அவர்கள், அவர்களுக்கு ஆலமே அர்வாஹில் வைத்து அவரின் வயதிலிருந்து 40 வயதை நபி தாவூத் (அலை) அவர்களுக்குக் கொடுத்ததை ஞாபகமூட்டினார்கள்.முதலில் ஆதம் (அலை) அவர்கள் மறுத்தார்கள்.பின்பு ஓ...... நான் அதை மறந்து விட்டேன் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதம் (அலை) அவர்கள் மறந்தார்கள். அவர்களின் பிள்ளைகளும் மறந்தார்கள். ஆதம் (அலை) அவர்கள் மறுத்தார்கள். அவர்களின் பிள்ளைகளும் மறுக்கிறார்கள்.
இதைத் தான் மரபணு தொடர்ச்சி என்பார்கள்.

நமது முன்னோர்களின் மரபணுவின் தொடர்ச்சியாக அவர்களிடம் இருந்த குணங்களும் திறமைகளும் இன்று நம்மில் இருப்பதை நாம் காணுகின்றோம்.

எனவே நாம் நமது சந்ததிகளை உருவாக்குகிறோம் என்பதை மனதில் கொண்டு நமது செயல்களை சீரானதாக, சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் கோபக்காரனாக இருந்தால் கெட்ட குணம் கொண்டவர்களாக இருந்தால் நமது பிள்ளைகளிடமும் அந்த குணங்கள் வெளிப்படும். குணங்கள் மட்டுமல்ல நோய்களும் தொடர்கிறது.

இன்று மருத்துவர்களிடம் உடல்நிலை சரியில்லாமல் நோயிற்று ஒருவர் சென்றால் அவர்கள், அதை சோதனை செய்து விட்டு உங்கள் பெற்றோருக்கு இந்த வியாதி இருந்ததா ? எனக் கேட்கிறார்கள்.

ஆக மனிதன் தன் மரபணுக்களின் வழியாக நோய்களை மட்டுமல்ல குணங்களையும், செயல்பாடுகளையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறான் என்பது தெளிவாகின்றது.

எனவே நமது செயல்களை, குணங்களை தூய்மையானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒழுக்கம் கெட்டால் நமது பிள்ளைகளும் ஒழுக்கம் கெடும். நாம் நமது தாய் தகப்பனை வேதனைப்படுத்தினால் நம்மை நமது பிள்ளைகள் வேதனைப் படுத்தும்.நம்மை சீராக்குவது என்பது அது நமது பிள்ளைகளை சீராக்குவதற்கு வழி வகுக்கும்.


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks