Monday, 2 May 2016

இறை தரிசனம் இறுதித் தூதருக்கு கிடைத்ததேன்?மிஃராஜ் இரவு என்பது அண்ணல் நபி அவர்களுக்கு இதுவரை யாரும் அடைந்திராத அந்தஸ்தை வாங்கிக் கொடுத்த இரவாகும். யாரும் தொட்டிராத சிகரத்தை தொடுவதற்குக் காரணமாக அமைந்த இரவாகும்.


ربى ارنى  இறைவா.... உன்னை எனக்கு காட்டு எனக் கேட்ட மூஸா நபிக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணலம் பெருமானார் அவர்களுக்கு கேட்காமலேயே அந்த பாக்கியம் கிடைத்தது. நபி அவர்களுக்கு ஏன் கிடைத்தது என்றால் " கேட்காததினால் " தான் கிடைத்தது.

கேட்பது என்பது வாதம் புரிவதாகும். நாம் ஒரு பதவிக்கு விண்ணப்பம் செய்வது என்பது, அந்த பதவிக்கான முழுமையான தகுதி என்னிடம் இருக்கிறது என்று நாம் வாதிடுவதற்கான ஆதாரமாகும். அடையாளமாகும். இந்நிலை உலக நிகழ்விற்கும் அரசியலுக்கும் உகந்ததாக இருக்கலாம். ஆனால் ஆன்மீகத்தில் இந்த செயல் ஆகாத செயலாகும்.

ஆன்மீகத்தின் உச்சத்தை அடைந்தவர்கள் தகுதியைக் கொண்டு அடையவில்லை, அல்லாஹ்வின் தயவைக் கொண்டுதான் அடைந்தார்கள். இதையே நபி அவர்கள் தனது வாழ்வின் சொல்லாலும் செயலாலும்  உணர்த்தினார்கள்.

தான் அல்லாஹ்வின் அடிமை என்ற பெயரைத் தவிர தன்னிடம் எதுவும் இல்லை எனக் கருதிய காரணத்தினால் எல்லாம் அவர்களுக்கு கிடைத்தது.

இறைமறையின் முதலாவது வசனம் நபி அவர்களுக்கு இறங்கிய போது நான் ஓதக் கூடியவனல்ல (அந்தத்தகுதி உள்ளவனாக நானில்லை) என்று அடக்கத்தோடு கூறினார்கள். உடனே ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி அவர்களை மூன்றுமுறை கட்டியணைத்தார்கள்.  எதற்காக ? எதையும் கொடுப்பதற்காக அல்ல. மாறாக நபி அவர்களை அவர்களுக்கே காட்டுவதற்காக. கண்ணாடியாக செயல் பட்டார்கள்.

அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் ;
சிங்கக் குட்டி ஒன்று ஆடுகளுக்கு மத்தியில் தன்னை ஒரு ஆடாக நினைத்து வளர்ந்தது, ஒருநாள் ஆடுகளை வேட்டையாட அந்த பகுதிக்கு மற்றொரு சிங்கம் வந்தது. அது ஆடுகளைப் பிடிப்பதற்காக துரத்திய போது அந்த ஆட்டுக் கூட்டத்தோடு சேர்ந்து இந்த சிங்கக் குட்டியும் பயந்து ஓடியது. இதைக் கண்ணுற்ற அந்த சிங்கம், தன் இனத்தைச் சார்ந்த அந்தக் குட்டி சிங்கத்தைப் பிடித்து நீ ஏன் ஓடுகிறாய்!  எனக்கேட்டது. அதற்கு நான் ஒரு ஆடு என்றது.இல்லை நீ ஒரு சிங்கம் என்ற போது அது நம்ப மறுத்தது.

உயிரினங்கள் தன் கண்களால் அடுத்த உயிரினங்களின் முகத்தைக் காண முடியுமே தவிர தன் முகத்தைக் காண முடியாது. இதுவரை தன் முகத்தை கண்டிராத அந்த சிங்கக் குட்டியை நீரோடைக்கு அழைத்து வந்து தெளிந்த அந்த நீரோடையில் அதனுடைய முகத்தைக் காண வைத்தது உணர்த்தியது.

அது போல கண்மணி நாயகம் அவர்களுக்கு ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தன்னை ஒரு கண்ணாடியாக ஆக்கி  அவர்கள் யாரென்பதை அவர்களுக்கு உணர்த்தினார்கள்.

நபிகள் நாயகம் அவர்களின் தன்னடக்கத்தை இந்த வசனமும் தெளிவுபடுத்துகிறது ;
وَمَا كُنتَ تَرْجُو أَن يُلْقَىٰ إِلَيْكَ الْكِتَابُ إِلَّا رَحْمَةً مِّن رَّبِّكَ ۖ فَلَا تَكُونَنَّ ظَهِيرًا لِّلْكَافِرِينَ
28:86. இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்க வில்லை. எனவே நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.

அல்லாஹ் வஹியையும்  வேதத்தையும்  தகுதியின் அடிப்படையில் வழங்குவதில்லை. தன்னடக்கம் இருந்தால் தான் அதை வழங்குவான் என்தை நபி புரிந்து வைத்திருந்தார்கள். இந்நிலையின் காரணமாகத்தான் நபி அவர்களுக்கு வாழ்வில் எல்லாவிதமான ஏற்றங்களும் கிடைத்தது என்பதை வராற்றின் மூலமாக நாம் காண்கிறோம்.

நபி அவர்களின் சொல்லிலும் செயலிலும் தன்னடக்கத்தை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

நபி மூஸா (அலை) அவர்கள் தன் கூட்டத்தாரோடு ஃபிர்அவ்னிடமிருந்து தப்பிச் சென்று கொண்டிருந்த போது முன்னால் செங்கடல் குறுக்கிடுகிறது. பின்னால் அவர்களைத் துரத்திக் கொண்டு ஃபிர்அவ்ன் வந்து கொண்டிருந்தான். வசமாக மாட்டிக் கொண்டோம் என இஸ்ரவேலர்கள் பதறிய போது,
قَالَ كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
26:62. அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்என்று கூறினார்.

இதே போன்ற நிலை அண்ணலம் பெருமானார் அவர்களுக்கு ஹிஜ்ரத்தின் போது ஏற்பட்டது. தன் தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களோடு சவ்ர்  குகையில் தங்கியிருந்த போது கொலைவெறி பிடித்த மக்கத்து காபிர்கள் அவர்களைத் தேடி அந்த இடத்தை நெருங்கினார்கள். குகையின் வாசலில் அவர்களின் கால் தெரிந்தது. அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் பயந்து நடுங்கினார்கள். அப்போது அண்ணல் அவர்கள் கூறினார்கள்.

إِلَّا تَنصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ۖ فَأَنزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَّمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَىٰ ۗ وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا ۗ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

9:40. (நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

இந்த இரண்டு பதிலையும் விரிவுரையாளர்கள் ஒப்பாய்வு செய்தார்கள். நபி மூஸா (அலை) அவர்கள் இக்கட்டான அந்நிலையில் அவர்கள் சொன்ன பதிலில் என்னோடு அல்லாஹ் இருக்கிறான் என்று முதலில் தன்னை முற்படுத்தினார்கள். ஆனால் கண்மணி நாயகம் அவர்கள் அதே போன்ற இக்கட்டான சூழ்நிலையில் பதிலளிக்கும் போது அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்று முதலில் அல்லாஹ்வை முற்படுத்தினார்கள்.மட்டுமல்ல மூஸா அலை அவர்கள் ان معي ربي  என்னோடு அல்லாஹ் இருக்கிறான் என்று கூறி தன் சமூகத்தை இணைக்காமல் விட்டு விட்டார்கள்.ஆனால் நாயகம் அவர்கள் ان الله معنا  நம்மோடு என்று கூறி தன் சமூகத்தையும் அங்கே இணைத்துக் கொண்டார்கள்.

இந்த பதிலிலிருந்தே நபி அவர்களுக்கும் மற்ற ஏனைய நபிமார்களுக்கும் உள்ள வித்தியாசத்தை  உணர்ந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

தன்னை எப்போது ஒரு மனிதன் முற்படுத்துவான் என்றால், எப்போது தன்னை ஒரு பொருட்டாக கருதுவானோ அப்போது தான். நபி அவர்கள் தன்னை எப்போதும் ஒரு பொருட்டாகக் கருதியது இல்லை. அதனால் தான் எப்போதும் எந்நிலையிலும் அல்லாஹ்வையே முற்படுத்தினார்கள். எனவே அல்லாஹ் அவர்களை முற்படுத்தினான்.

இந்த வார்த்தை வித்தியாசத்தினால் என்ன வந்து விடப்போகிறது என்று நாம் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது. நாம் சொல்லக்கூடிய வார்த்தை என்பது நமது வாழ்க்கையையே மாற்றக்கூடியது. வரலாற்றையும் மாற்றும் ஆற்றல் கொண்டது, நாம் உதிர்க்கும் சொற்கள் என்பது சிம்மாசனத்தையும் பெற்றுத் தரும் என்பதை வரலாற்றின் மூலமாக காணலாம்.

கலீபா ஹாரூன் ரஷீத் பாதுஷா (ரஹ்) அவர்களுக்கு அமீன், மஃமூன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் அமீன் என்பவர் ராணி சுபைதாவுக்கு பிறந்தவர். இவர் அரபியாகவும், ஹாஷிமியாகவும், எல்லாத் தகுதியும் உடையவராகவும் இருந்தார். மஃமூன் என்பவர் பாரசீகத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அடிமைப் பெண்ணாக இருந்த ஒருவருக்கு பிறந்தவர். இவர், அவரை விட பண்புடை யவராகவும், நாகரீகம் தெரிந்தவராகவும், இலக்கியம் படித்தவராகவும், மார்க்க ஞானம் உடையவராகவும் இருந்தார்கள். இவரிடத்திலும் எல்லாத் தகுதியும் மதிநுட்பமும் இருந்தது.

இந்நிலையில் அரசர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தனக்கு பிறகு அரசாளப் போகும் தனது வாரிசை தேர்ந்தெடுக்க முற்பட்ட போது ராணி சுபைதா அவர்கள் எனது மகன் அமீனை அரசராக்குங்கள் என்றார்.ஆனால் கலீபா அவர்கள் போட்டியின் அடிப்படையில் அதில் தகுதியானவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தார்.பின்பு தனது மகன்களில் முதலாவதாக அமீனை சபைக்கு அழைத்தார். அப்போது அவரது கையில் மிஸ்வாக் இருந்தது.மன்னர் அவர்கள் அதை சுட்டிக் காட்டி இது என்ன ? எனக் கேட்டார்....? “மிஸ்வாக் என பதிலளித்தார். இதனுடைய பன்மை வார்த்தை என்ன? எனக் கேட்டார்...? “மஸாவீக் என பதிலளித்தார்.

அரபியில் மிஸ்வாக் என்பதின் பன்மை மஸாவீக் என்பது சரிதான். என்றாலும்,மஸாவீக் என்பதை ஒற்றைச் சொல்லாகப் பார்த்தால் அதில் அர்த்தப்பிழை எதுவும் இல்லை.ஆனால் அதை மஸாவீ + க என்று பிரித்துப் பார்த்தால் உனது தீமைகள் என்று அனர்த்தம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.மரியதைக் குறைவான அர்த்தமுடைய இந்த சொல்லை அவர் பொருட்படுத்தாமல் சபையில் சொல்லிவிட்டார்.
அடுத்ததாக மஃமூன் சபைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் இது என்ன? எனக் கேட்டார்..? “மிஸ்வாக் என பதிலளித்தார். இதனுடைய பன்மை வார்த்தை என்ன எனக்கேட்ட போது மஸாவீக்க உனது தீமைகள் என்று பதிலளிக்காமல் என் தந்தையே!  ضد محاسنك அது உங்களது நன்மையின் எதிர்பதம் என்று பதிலளித்தார்.

இப்போது தன் மனைவி சுபைதாவிடம் யாருக்கு தகுதி இருக்கிறது சொல் எனக்கேட்டார்கள். மஃமூனுக்கே தகுதியிருக்கிறது என ராணி சுபைதா அவர்கள் பதிலளித்தார்கள்.

வார்த்தைகள் கண்ணியமானதாக பண்பட்டதாக யாருக்கு வரும் என்றால் தன் வாழ்வில் யார் பண்பட்டவர்களாக கண்ணியமானவர் களாக வாழ்கிறார்களோ அவர்களுக்கு தான் வார்த்தையும் கண்ணியமானதாக வரும்.

கண்மணி நாயகம் அவர்கள் இவ்வுலகில் பண்பட்டவர்களாக வாழ்ந்தார்கள். எனவே தான் எவருக்கும் கொடுக்காத சிறப்பைக் கொடுத்தான்.

அண்ணலம் பெருமானார் அவர்கள் தன்னிடம் அடிமைத்தனம் என்பதைத் தவிர எதுவும் இல்லை என்று கருதிய காரணத்தினால் தான் அல்லாஹ் அருள்மறையாம் திருகுர்ஆனில் கூறும் போது தனது அடிமையை மிஃராஜிற்கு அழைத்துச் சென்றான் என்று சொல்கிறான்.
நபி  அவர்களை அல்லாஹ் அப்திஹி என ஏன் கூறினான் என்றால், அல்லாஹ்விடம் அடிமைத்தன பண்பில் உயர்ந்திருந்தார்கள்.
நபி  அவர்களுக்கு ஏராளமாக சிறப்புப் பெயர்கள் இருந்தும் அப்திஹி அவனது அடிமை என்று உயர்வான அந்தஸ்தை வழங்கிய இந்த மிஃராஜைப் பற்றி கூறும் இடத்தில் அல்லாஹ் குறிப்பிட்டது அவனுக்கு மிகவும் பிடித்தமான பெயர் அப்துஹு என்பது தான் என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நாம் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நம்மிடம்  உள்ள திறமைகளைக் கொண்டோ, நமது சக்தியைக் கொண்டோ பெற முடியாது. என்னிடம் எதுவும் இல்லை யா அல்லாஹ் நான் உனது அடிமை என்று சொல்லும் நிலைக்கு மனிதன் மாறும் போது தான் உயரிய அந்தஸ்தை அடைய முடியும்.

" இய்யாக நஃபுது " நான் உன்னை வணங்குகிறேன். நான் உனது அடிமை என்ற வார்த்தை தான் மனிதனை உயரத்திற்கு அழைத்துச் சென்று சிகரத்தைத் தொட வைக்கிறது.


இந்த உண்மையைத் தான் மிஃராஜ் இரவு நமக்கு பாடமாக கற்றுத் தருகிறது.

1 comment:

  1. தான் அல்லாஹ்வின் அடிமை என்ற பெயரைத் தவிர தன்னிடம் எதுவும் இல்லை எனக் கருதிய காரணத்தினால் எல்லாம் அவர்களுக்கு கிடைத்தது.

    இந்த உயர்ந்த அப்திய்யத்தை நம் எல்லோருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!

    ReplyDelete

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks