Thursday 12 May 2016

உழைத்து வாழ வேண்டும்

                                     
                   
عن عمر بن الخطاب قال : قال رسول الله صلى الله عليه و سلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹள்ரத் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ;

நீங்கள் அல்லாஹ்வின் மீது எப்படி தவக்குல் – நம்பிக்கை - வைக்க வேண்டுமோ அப்படி நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போல அல்லாஹ் உங்களுக்கு உணவளிப்பான்.பறவைகள் காலையில் பசியோடு சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகிறது என்றார்கள்.(திர்மிதி)


தவக்குல் என்றால் அல்லாஹ்வின் மீது முழுமையாக பொறுப்பை விட்டு  விடுவதாகும். அல்லாஹ்வின் மீது பொறுப்பை சாட்டி விட்டு நிம்மதியாக நம்பிக்கையோடு இருப்பதாகும். அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு நம்பிக்கையோடு இருக்கும் போது நமது வாழ்க்கை நிம்மதியாக சந்தோஷமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கப்பலிலோ, விமானத்திலோ, ரயிலிலோ நாம் பயணம் செய்யும் போது நமது லக்கேஜ்களை நமது தலை மீது வைத்துக் கொள்வதில்லை. அவைகள் மீது இறக்கி வைத்து விட்டு நாம் நிம்மதியாக இருக்கிறோம். அவ்வாறு செய்வதால் தான் அந்த பயணம் சுகமானதாக அமைகின்றது. அது போல வாழ்க்கையில் நமது சுமைகளை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட வேண்டும்.

பறவைகள் காலையில் பசியோடு சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகிறது. எந்த பறவையும் பசியோடு திரும்புவதில்லை.
அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பது என்றால் அதில் பல நிலைகள் இருக்கிறது. அதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று உழைக்காமல் இருக்க வேண்டும், முயற்சிக்காமல் இருக்க வேண்டும் என்பது பொருளல்ல.

மேற்கூறிய ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உதாரணம் கூறும் போது பறவைகளுக்கு அல்லாஹ் உணவளிப்பதைப் போல என்றார்கள். பறவைகள் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து விட்டு கூட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதில்லை. பறந்து சென்று உணவைத் தேடி போராடி அதன் பிறகு தான் உண்ணுகிறது.

நபியவர்கள் பறவையைப் போல எனக் கூறியதிலிருந்தே அது போல முயற்சிக்க வேண்டும், பாடுபட வேண்டும் என்பது தெளிவாகிறது.

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப் பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கு திட்டமிடுதல் என்பது மிக அவசியமான ஒன்றாகும். அதன் பிறகு நாம் எடுத்த முடிவை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்க வேண்டும்.

உழைக்க வேண்டும் உழைப்பின் மீது நம்பிக்கை வைக்காமல் அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டும். முயற்சிக்க வேண்டும் அந்த முயற்சியை அடைவதற்கான எல்லா காரண காரியங்களையும் நாம் செய்ய வேண்டும் அதே நேரம் முயற்சியை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டும்.

பேசாமல் உழைக்காமல் இருப்பதற்கு பெயர் தவக்குல் அல்ல.

يقول معاوية بن قرة : لقي عمر بن الخطاب ناساً من أهل اليمن ، فقال : من أنتم ؟ قالوا : نحن المتوكلون . قال : بل أنتم المُتَّكلون . ألا أخبركم بالمتوكلين ؟ رجل ألقى حبة في بطن الأرض ثم توكل على ربه
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் எமன் தேசத்திலிருந்து வந்த ஒரு கூட்டத்தினரைப் பார்த்து நீங்கள் யார்....?  எனக் கேட்டார்கள். நாங்கள் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தவர்கள் என்றார்கள். பூமியில் வித்தை வைத்து விட்டு அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பவர் தான் உண்மையான தவக்குல் வைப்பவர்கள் என்றார்கள். (ஷுஃபுல் ஈமான்)
நீங்கள் உழைக்காமல் இருப்பவர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தவர்கள் அல்ல என்று அவர்களைக் கண்டித்தார் கள்.

فقد جاء عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال يا معشر القراء ارفعوا رؤوسكم فقد وضح لكم الطريق فاستبقوا الخيرات لا تكونوا عيالا على الناس
பள்ளிவாசலில் சிலர் தலையைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்தி ருந்தார்கள். அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள்  ; ஓ..... ஏழைகளே! தலையை உயர்த்துங்கள். வெளியில் சென்று உழையுங்கள் பாடுபடுங்கள். மக்களுக்கு சுமையாக இருக்காதீர்கள் என்றார்கள்.
உழைப்பின் முக்கியத்துவத்தை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் வலியுறுத்தினார்கள்.

وما أحسن قول أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه:
لا يقعدن أحدكم عن طلب الرزق وهو يقول: اللهم ارزقني، وقد علم أن السماء لا تمطر ذهبا ولا فضة، والله تعالى إنما يرزق الناس بعضهم من بعض.
உங்களில் யாரும் ரிஜ்கைத் தேடுவதை விட்டு விட்டு எனக்கு ரிஜ்கைக் கொடு என்று அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டு அமர்ந்து விட வேண்டாம். ஏனென்றால் வானம் தங்கத்தையும் வெள்ளியையும் மழையாக பொழியாது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். என்றார்கள்.

உழைக்க வேண்டும்.ஆனால் அந்த உழைப்பை நம்பாமல் அல்லாஹ் வின் மீது தவக்குல் வைக்க வேண்டும்.
روي أن قوما قدموا علي النبي وتحدثؤا عن أحدهم فقالوا :يصوم النهار و يقوم الليل و يكثر الذكر فقال صلي الله عليه و سلم :أيكم يكفيه طعامه و شرابه فقالوا :كلنا , فقال كلكم خير منه
ஒரு முறை ஸஹாபாக்கள் ஒரு மனிதரின் இபாதத்தைப் பற்றி நபியவர்களிடம் ; அவர் இரவு முழுவதும் தொழுகிறார், பகலில் நோன்பு வைக்கிறார் அல்லாஹ்வை அதிகம் திக்ர் செய்கிறார் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு யார் உணவளிக்கிறார் என்று கேட்டார்கள். ஸஹாபாக்கள் நாங்கள் தான் உணவளிக் கின்றோம் என்றனர். இதைக் கேட்ட நபியவர்கள் நீங்கள் அனைவரும் அவரை விட சிறந்தவர்கள் என்றார்கள்.

அடுத்தவர்களுக்கு சுமையாக இருப்பது, அடுத்தவர்களிடம் தேவையாக இருப்பது அது கண்ணியமானது அல்ல என்பதை கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

உலகிற்கு வந்த எல்லா நபிமார்களும் உழைத்து பாடுபட்டிருக்கிறார்கள். தனது சொந்த கரத்தால் தொழில் செய்து வருவாய் ஈட்டி அதில் சாப்பிடுவது தான் சிறந்தது. அடுத்தவர்களின் உழைப்பில் சும்மா இருந்து உண்பதும் சுகம் காணுவதும் மார்க்கத்தில் உகந்தது அல்ல. நபியவர்கள் காட்டித் தந்த பாதையும் அல்ல.

நபியவர்கள் உழைப்பதற்காக செல்வதை பீ ஸபீலில்லாஹ் என்றார்கள்.

مر على النبي صلى الله عليه وسلم رجلٌ فرأى أصحاب رسول الله صلى الله عليه وسلم من جلده ونشاطه فقالوا: يا رسول الله لو كان هذا في سبيل الله، فقال صلى الله عليه وسلم: (إن كان خرج يسعى على ولده صغارا فهو في سبيل الله،وإن كان خرج يسعى على أبوين شيخين كبيرين فهو في سبيل الله،وإن كان خرج يسعى على نفسه يعفها فهو في سبيل الله،وإن كان خرج يسعى رياء ومفاخرة فهو في سبيل الشيطان

ஒருநாள் நபியவர்களோடு ஸஹாபாக்கள் அமர்ந்திருந்த போது திடகாத்திரமான ஒரு மனிதர் அந்த வழியாக தன் குடும்பத்திற்காக சம்பாதிப்பதற்கு கடந்து சென்றார். இதைப் பார்த்த தோழர்கள் இந்த மனிதர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ;  இவர் தனது சிறிய குழந்தைகளுக்காக சம்பாதிக்க சென்றால் அது அல்லாஹ்வின் பாதையில் செல்வதைப் போன்றது தான். தனது வயது முதிர்ந்த தாய் தந்தைக்காக சம்பாதிக்க சென்றால் அதுவும் அல்லாஹ்வின் பாதையில் செல்வது போன்றதுதான். தான் கண்ணியமாக வாழ வேண்டும் யாரிடமும் தேவையாகி விடக் கூடாது என்பதற்காக உழைக்கச் சென்றால் அப்போதும் இவர் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். பெருமைக்காக முகஸ்துதிக்காக வெளியே புறப்பட்டுச் சென்றால் அப்போது  ஷைத்தானுடைய பாதையில் இருக்கிறார் என்றார்கள்.

உழைப்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார்கள் என்ற உன்னதமான கருத்தை நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.


பறவைகள் எப்படி அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து எதிர்பார்ப்போடு சென்று வயிறு நிரம்பி திரும்புகிறதோ அது போல நாமும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து  உழைக்க வேண்டும். அப்படி நாம் செய்யும் போது பறவைக்கு உணவளிப்பதைப் போல நமக்கும் அல்லாஹ் உணவளிப்பான்.

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks