Thursday 6 October 2016

யோகா அது ஆகா

الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ
"அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்". (அல்குர்ஆன் :3 ; 19)

பேச்சிலே சிறந்தது அல்லாஹ்வுடைய பேச்சு. நாகரீகத்தில் சிறந்தது நபிகள் நாயகம்   ﷺ அவர்கள் காட்டிய நாகரீகம்.

நமக்கென்று கலாச்சாரமும் சட்ட திட்டங்களும் இருக்கிறது.அதைத்தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.கல்யாணம் செய்ய வேண்டுமா? யாரை கல்யாணம் செய்வது கூடும், யாரை  கல்யாணம் செய்வது கூடாது என்ற சட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும். சாப்பிட வேண்டுமா? எதை சாப்பிடுவது ஹலால், சாப்பிடுவது ஹராம் என்று அதைத் தெரிந்து அதன் பிரகாரம் நாம் நடக்க வேண்டும். வியாபாரம் செய்ய வேண்டுமா? ஹலாலான வியாபாரம் எது, ஹராமான தடுக்கப்பட்டது எது என்பதை  தெரிந்து நாம் அதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி வாழ்வியலின் எல்லா துறைகளுக்கும் வழிகாட்டிய இஸ்லாம், மனிதனுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை வைத்திருக்கிறது.இஸ்லாத்தில் தீர்வு இல்லாத எந்த பிரச்சனைகளும் இல்லை.

மனிதனுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். மனிதனுக்கு நிம்மதி கிடைக்க வேண்டும். மனம் அமைதி அடைய வேண்டும். அதற்கு என்ன வழி ? அதற்கும் இஸ்லாத்தில் வழி இருக்கிறது. அல்லாஹ்வை திக்ர் செய்ய வேண்டும், தியானம் செய்ய வேண்டும்.

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
"அல்லாஹ்வை திக்ர் செய்வதைக் கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகிறது".(13;28) என்று அல்லாஹ் "அலா "அறிந்து கொள்ளுங்கள்! என்று அழுத்தம் திருத்தமாக நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.

நாம் சாப்பிடுவதற்காக, பசி அடங்க வேண்டும் என்பதற்காக எதையும் சாப்பிடமாட்டோம். கல்யாணம் செய்ய வேண்டும், நம்முடைய  இச்சைகளை தனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி எந்த பெண்ணையும் நாம் கல்யாணம்  செய்ய மாட்டோம். வியாபாரம் செய்ய வேண்டும், பணம் வர வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்பதற் காக எல்லா வகையான வியாபாரத்தையும் நாம் செய்ய மாட்டோம். அதைப் போல மனம் நிம்மதி அடைய வேண்டும் என்பதற்காக, நம்முடைய மனம் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக மார்க்கத்திற்கு முரணான எந்த வழியாக  இருந்தாலும் நாம் அதை ஒருக்காலும்  தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடாது.

இன்று உலகத்தில் "யோகா" வைப் பற்றி அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த யோகாவில் கலந்து கொள்ளக்கூடிய தலைவர்களைப் பற்றியும், அதிலே ஈடுபடக்கூடிய கலைத் துறையைச் சார்ந்தவர்களைப் பற்றியும் அதில் ஈடுபடக்கூடிய பெரும் பெரும் தொழில் அதிபர்களைப் பற்றியெல்லாம் விளம்பரத்தில் காட்டப்படுகின்றது. உலகத்திலுள்ள பெரும் நகரங்களில் எல்லாம் யோகா நடப்பதைக் காட்சிகள் எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு காட்டப்படுகிறது.

அதை பார்க்கிற முஸ்லிம்களுக்கு நாமும் அந்த  யோகாவில் கலந்து கொண்டால் என்ன? என்ற ஒரு நினைப்பு வருகிறது. அந்த யோகாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற்படுகின்ற உடல் ரீதியான,  உள ரீதியான மாற்றங்களையும் அதனால் ஏற்படுகிற பலன்களையும் பார்க்கிறபொழுது, அறிகின்றபொழுது, கேள்விபடுகின்றபொழுது இஸ்லாத்தைச் சார்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதில் ஈடுபட்டால் என்ன? என்ற ஆசை வருகிறது என்பது மட்டுமல்ல! எத்தனையோ நம்முடைய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள்  அந்த யோகாவில் கலந்து கொண்டு அந்தப் பயிற்சி யில் ஈடுபடுகிறார்கள். இது ஆரோக்கியமான விஷயம் அல்ல! ஆபத்தான விஷயம்.

மனம் நிம்மதி அடைய வேண்டும் என்பதற்காக வேண்டி நமக்கென்று ஒரு வழிமுறையை  அல்லாஹ்வும்,  ரசூலும்   சொல்லித்தந்து இருக்கிற பொழுது அதைத்தான்,அந்த மார்க்கத்தைத் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,  அதற்கு விரோதமான ஒரு மார்க்கம், அதற்கு விரோதமான ஒரு வழி அது யோகாவின் மூலமாக வந்தாலும் சரி, அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரில் வந்தாலும் சரி நாம் அதை பின்பற்றுவதோ,  அதன் பிரகாரம் நடப்பதோ நமக்கு அது தடை செய்யப்பட்டு இருக்கின்றது.

மலேசியாவினுடைய. "உகாமா" - இஸ்லாமிய மதவிவகாரம் -  யோகாவை ஹராம் என்று ஃபத்வா கொடுத்திருக்கின்றது.எகிப்தில் கெய்ரோ இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய மார்க்க நிர்வாகம் அதில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறது. ஸவூதியில் கூட அது ஹராம் என்று ஃபத்வா வழங்கப்பட்டு இருக்கின்றது. உலகெங்கிலும் இருக்கக்கூடிய இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் யோகாவை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.ஏன் அந்த யோகாவைத் தடுத்தார்கள் ? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். மார்க்க அறிஞர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று சொல்லுகிற போது நாம் அதை மதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும்.

யோகா என்பது அது ஒரு இந்து மதத்தின் வணக்க வழிபாடை அடிப்படையாகக் கொண்டு உருவான தியானம். பல்வேறு வடிவங்களில் பல்வேறு ரூபங்களில் அது வித்தியாசம் பெற்று இன்று காணப்படலாம்! ஆனாலும் கூட அதனுடைய வேர் ஒரு ஷிர்க்காகும். யோகாவின் சூத்திரம் என்ன? தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர் கூட அந்த யோகாவைப்பற்றி ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் ; யோகாவைக் கற்றுக்கொடுத்த குரு எனக்கு ஒரு சூத்திரத்தைக் கற்றுக்கொடுத்தார். யோகாவுடைய சூத்திரம், "நாராயண நமகா" என்பதாகும்.இதைத்தான் நீங்கள் சொல்ல வேண்டும்! என்று அவர்  சொன்னார்.அது சமஸ்கிருதம். அந்தத் தலைவர் ஒரு தமிழ் அறிஞர், தமிழ் பற்றாளர். இதை தமிழில் சொல்லலாமா ? என்று கேட்கின்றார் தமிழ் படுத்தியும் சொல்லலாமே! என்று சொல்லப்பட்டது. அதை தமிழ்ப்படுத்தினால் “சூரியனைப் போற்றி”என்று சொல்ல வேண்டும்.நீங்கள் வேண்டுமானால் இப்படி தியானம் செய்யலாம் என்று அனுமதி கொடுக்கின்றார்.

சூரியன் உள்ளிட்ட எந்த சிருஷ்டிகளும் இஸ்லாத்தில் போற்றுதலுக் குரியவையல்ல. (அல்குர்ஆன் : 41;37) படைப்புகள் அனைத்தும் சிந்தனைக் குரியது. வணக்கத்திற்குரியதோ போற்றுத்தலுக்குரியதோ அல்ல. படைப்பு கள் ஆரோய்ச்சிக்குரியது. ஆராதனைக்குரியதல்ல.இது இந்த யோகாவில் இருக்கக்கூடிய இஸ்லாத்திற்கு விரோதமான முதல் விஷயம்.

இவர்களைப் பொறுத்தமட்டில் மொழிமாற்றம் ஏற்பட்டதால் பிரச்சனை தீர்ந்து விட்டது.ஆனால் நமக்கு அதோடு மட்டும் பிரச்சனை தீராது.நமது மார்க்கம் மொழியைக் கடந்தது.மூலத்தை மைய்யமாகக் கொண்டது.ஆக இப்படி மொழிமாற்றம் செய்தும் கூட இஸ்லாமிய மக்கள் யோசிக் கிறார்கள் என்று வந்த பொழுது,இதைக் கூட நீங்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை "ஓ...ம்" என்று சொன்னாலே போதும் என்று சற்று இறங்கி வந்தார்கள்.அதிலும் பலனில்லை என்று வந்த போது இன்னும் சற்று தளர்த்தி  அதைக்கூட சொல்லத் தேவையில்லை. மனதால் அதை நினைத்தால் போதும். அதற்குக்கூட இப்பொழுது வியாக்கியானம் செய்து முஸ்லிம்களாகிய நீங்கள் "ஹூ..."என்ற திக்ர் செய்கிறீர்கள். அதனுடைய மறு உருவம் தான் "ஓ...ம்" என்பது.அது எப்படி என்று கேட்கப்பட்ட பொழுது வாயை திறந்து "ஹூ"என்று சொல்கிறீர்கள். அவ்வாறே வாயை மூடி "ஹூ"என்று சொல்லிப் பாருங்கள் அது "ஓம்" என்று தான் வரும். இவ்வாறு வியாக்கியானமும் செய்தார்கள்.எது எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை, யோசிக்கிறார்கள் என்று  வந்த போது, இன்னும் ரொம்ப ரொம்ப இறங்கி வந்து "ஓ...ம்" என்று கூட நினைக்க வேண்டாம். நீங்கள் உங்கள் அல்லாஹ்வை நினைத்துக் கொண்டாலே போதும் என்ற அளவிற்கு கீழ் நிலைக்கு இறங்கி வந்துள்ளார்கள்.

அவர்களின் இந்த வியாபாரத்தின் முக்கியமான  டார்கட் முஸ்லிம்கள். இவர்களை  எப்படியாவது வேட்டையாட வேண்டும். இஸ்லாமியர்களைப் பொருத்தவரை அவர்கள் மதத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். மதத்திற்கு விரோதமாக சொல்லவோ செயல்படவோ மாட்டார்கள். உலகத்தில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் பிடித்து வந்து விடலாம் ஆனால், முஸ்லிம்களை சாதாரணமாக பிடித்து வர முடியாது. இஸ்லாத்திற்கு வெளிப்படையாக எந்த வகையான மாற்றத்திற்கும், அதற்கு முரணாக நடப்பதற்கும் அவர்களின் மனம் ஒப்பாது என்ற காரணத்தினால் இப்பொழுது இறங்கி வந்து நீங்கள் "அல்லாஹ்" என்பதை வேண்டுமானாலும் தியானம் செய்து கொள்ளுங்கள்! ஆனாலும் வாருங்கள் என்று அழைப்பு கொடுக்கப்படுகின்றது.நம்மில் பலர் அதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாம் விளங்க வேண்டிய விஷயம் என்னவென்றால்? யோகா பயிற்சியில் "அல்லாஹ் "என்று தியானித்தாலும் கூட அதில் நாம் கலந்து கொள்ளக்கூடாது.ஏன்  கலந்து கொள்ளக் கூடாது ? என்றால்! அடிப்படையில் அது ஷிர்க் என்னும் வேரில் இருந்து தான்  உருவாகி வருகிறது. இரண்டாவது ; அல்லாஹ் அல்லது “லாயிலாஹ இல்லல்லாஹ்” போன்ற ஆகுமான அனுமதிக்கப்பட்ட மந்திரங்களைக்கூட, சொல்ல வேண்டியவர் சொல்லிக் கொடுத்தால் தான் அதை சொல்ல வேண்டும். அப்போது தான் அதன் பலன் முழுமையாகக் கிடைக்கும். அல்லாஹ்வை, “லாயிலாஹ இல்லல்லாஹ்” வை ஏற்றுக் கொள்ளாத ஒருவர் அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தால் அந்தக் குருவை ஏற்றுக் கொண்டு அந்தக் கலிமாவைச் சொன்னால் அது ஏற்புடைய விஷயமல்ல.கலிமாவை ஏற்றுக் கொள்ளாத ஒருவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவர் சொல்லித்தரும் கலிமாவை நாம் எப்படி மொழியலாம் ? என்பதை சிந்திக்க வேண்டும்.
முஸ்லிமல்லாதவர் “அல்லாஹ்” என்று சொன்னாலும் கடவுளைப்பற்றி அவர்கள் விளங்கி நம்பியிருப்பதைப் போலத்தான் “அல்லாஹ்” என்ற சொல்லுக்கும் பொருள் கொடுப்பார். ”இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற நாகூர் ஹனீபாவின் பாடலை முஸ்லிமல்லாதவர்களும் பாடுகிறார் கள்.இந்த ஒலிப்பதிவு நாடாவைக் கேட்டு மகிழ்கிறார்கள் என்று நாமும் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.ஆனால் அவர்கள் “இறைவனிடம்” என்று பாடும் போது அங்கே அவர்களது இறைவனைத்தான் நாடுகிறார்களே தவிர முஸ்லிம்கள் நம்பும் அல்லாஹ்வை அல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அந்த யோகாவில் கலந்து கொள்வதால் எங்களுக்கு மனம் நிம்மதி அடைகின்றது,மனதிலே ஒரு வகையான சாந்தம் உண்டாகின்றது, எங்களுக்கு மன ஓர்மை ஏற்படுகிறது, வெற்றி கிடைக்கின்றது, அதன் மூலம் எங்களது துறைகளில் நாங்கள் சாதிக்க முடிகின்றது என்றெல்லாம் சொல்லப்படுவதை நீங்கள் கேட்கலாம்!இதே ஓர்மையும், மன அமைதியும், மன அமைதிக்கான பயிற்சியும் ஆகுமான வழிகளில் நம்மிடத்திலும் இருக்கிறது.அதைப் பின்பற்றலாம். இரண்டாவது, இந்த வெற்றியும் இந்த சமாதானமும் கிடைக்கின்றது என்பதற்காக வேண்டி மார்க்கத்திற்கு முரணாக எதையும் நாம் செய்து விட முடியாது!

நமக்கு நிக்காஹ் செய்ய வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணை நிக்காஹ் செய்ய மாட்டோம் இல்லையா! பசி எடுக்கின்றது. அந்தப் பசியை போக்க வேண்டும். சாப்பிட வேண்டும். அதற்காக ஹராமான ஒரு உணவை முஸ்லிம் அல்லாத ஒருவர் அறுத்த அசைவ உணவை நமக்கு தருகிறார். பசி தீர்ந்தால் போதும் தானே! தாகம் தீர வேண்டும். மதுவை தருகிறார். தாகம் அடங்கினால் போதும் தானே! என்பதற்காக நாம் அதைக் குடிக்கவோ!  அதைப் பருகவோ! அதை சாப்பிடவோ மாட்டோம்!  ஏன்? கூடாது இல்லையா. அதைப் போல தியானம் செய்வது  அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும், அதை யார் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தை இருக்கின்றது.நிம்மதி கிடைக்கின்றது என்றாலும், எங்கே நிம்மதி கிடைக்கின்றது? எப்படி நிம்மதி கிடைக்கின்றது? என்பதை நாம் பார்க்க வேண்டும்.நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நாம் முதலில் அந்தக் காரியம் எந்த வழியில் சென்றால் அது ஆகும் என்பதை கவனிக்க வேண்டும்.ஆகுமான வழியில் சென்று தான் அந்தக் காரியத்தை முடிக்க வேண்டுமே தவிர ஆகாத வழியில் சென்று நாம் ஆக வேண்டிய காரியத்தை முடிப்பதற்கு முயலக்கூடாது.

நெருப்பு இருக்கின்றது. அந்த நெருப்பை அனைப்பதற்கு தண்ணீரை ஊற்றினாலும் நெருப்பு அனைந்து விடும்.சிறுநீரை ஊற்றினாலும் நெருப்பு அனைந்து விடும்.அதனால் இரண்டும் ஒன்றாகி விடுமா? அது சுத்தமானது, இது அசுத்தமானது.கண்ணாடியில் தூசி படிந்து இருக்கின்றது. முகம் அதில் தெளிவாக தெரிய வேண்டுமென்றால்  அந்தத் தூசிகளையெல்லாம் துடைக்க வேண்டும். அந்த அழுக்கை நீக்க வேண்டும். தண்ணீரை ஊற்றினாலும் தூசி நீங்கி தெளிவாகும்.அந்தக் கண்ணாடியில் சிறுநீரை ஊற்றினாலும் கூட கண்ணாடி தெளிவாகும், பார்க்கலாம் என்பதற்காக இரண்டும் ஒன்றாகி விடுமா? தியானத்தில் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்த தியானத்தால் தெளிவுகள் பிறக்கின்றது. சில காட்சிகள் கூட தெரிகின்றது. ஆனாலும் அடிப்படையில் வித்தியாசங்கள் உண்டு. இங்கு அல்லாஹ்வுடைய திக்ரைக் கொண்டு கிடைக்கின்ற தெளிவு சுத்தமானது. இதல்லாமல் இஸ்லாம் அல்லாத மற்ற மதத்தின் வழியாக நமக்கு சில தெளிவே ஏற்பட்டாலும் அது அசுத்தமானது. தியானத்தின் மூலமாக இதயத்தை பரிசுத்தமாக்கிக் கொள்வதற்குப் பதிலாக அதே தியானத்தின் மூலமாக அது அல்லாத ஆகாத வழியைப் பின்பற்றுவதால் அந்த இதயம் மேலும் அழுக்காகுமே தவிர சுத்தமாகாது.

ஏற்கனவே கூறியது போல நாம் ஏன் அங்கே செல்ல வேண்டும்? நம்மில் அதற்கு வழி இல்லையா? இஸ்லாம் பிறரிடம் யாசிக்கும் மார்க்கமா? இல்லை, இல்லை. இஸ்லாம் கொடை கொடுக்கக் கூடிய தானம் வழங்கும் மார்க்கம். எல்லா மக்களுக்கும் சத்தியத்தைச் சொல்லக் கூடிய மார்க்கம் இஸ்லாம்.எல்லா விஷயங்களையும் தெளிவு படுத்துகின்ற மார்க்கம். யோகாவில் மூச்சுப் பயிற்சி என்று சொல்கிறார்கள்.இது நமக்கு சொல்லித் தரப்பட வில்லையா? "தரீகாகளில் "சூஃபியாக்கள்,  ஆன்மீக குருமார்கள் 'ஃபாஸ் & ஃபாஸ் ' என்ற திக்ரை நமக்கு கற்றுக்   கொடுத்துள்ளார்கள். 'ஃபாஸ் & ஃபாஸ் ' என்றால்? நாம் விடுகின்ற மூச்சு சாதாரணமாக போய் விடாமல் அது ஒரு தியானமாக ஆக வேண்டும் என்பதற்காக ஓர் வழிமுறையை சொல்லித் தந்தார்கள்.அதை நாம் பின்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

மூச்சை நாம் உள்ளே இழுக்கிற பொழுது அது நமக்கு ஹயாத். அதை வெளியே விடுகிற பொழுது அது நமக்கு மவ்த். எனவே மனிதன் ஒவ்வொரு வினாடியும் ஹயாத்தாகி இறந்து கொண்டு இருக்கின்றான். மரணத்தையும் அல்லாஹ் படைத்தான். வாழ்வையும் அல்லாஹ் படைத்தான் எதற்காக? உங்களை சோதிப்பதற்காக வேண்டி (67 ; 2) என்று சொன்னால், நாம் கடைசி தருணத்தில் மரணமாகுவோமே அந்த மரணம் மட்டுமல்ல. ஒவ்வொரு நிமிடமும் நாம் பிறந்து மரணித்துக் கொண்டு இருக்கின்றோம். மூச்சை உள்ளே இழுப்பது ஹயாத்தாகும். வெளியே விடுவது மவ்த் ஆகும்.பிறக்கின்ற குழந்தை முதலில் மூச்சை உள்ளே இழுக்கின்றது.அது ஹயாத். ஒரு மனிதன் இந்த உலகத்தை விட்டும் இறக்கிற பொழுது தன் மூச்சை அப்படியே வெளியே விட்டு விடுகின்றான்.விட்ட மூச்சு மீண்டும் உள்ளே வரவில்லை என்றால் அவனுக்கு அப்படியே மவ்த் வந்து விடுகின்றது.ஆக மூச்சை மேலே இழுக்கிற போது “அல்லா.....” என்று தியானித்து கீழே வருகிற போது “ஹு” என்று அது பிரிகிறது.இதற்கான பயிற்சி ஆன்மீகத்தில் இருக்கிறது.

இந்த மூச்சை எப்படி பயன்படுத்த வேண்டும்? எண்ணப்பட்ட மூச்சுகள் இருக்கின்றது. ஞான மேதை தக்கலை பீரப்பா வலியுல்லாஹ் அவர்களின் பாடலை எடுத்துப்பார்த்தால் அந்த மூச்சு சம்மந்தமான ரகசியங்களை யெல்லாம் பாடியிருக்கின்றார்கள்.நம்மிடத்தில் என்ன பஞ்சம் இருக்கின்றது? எல்லாம் சொல்லப்பட்டு இருக்கின்றது. அந்த மூச்சை அடக்கி ஆளக்கூடிய பக்குவங்களும் முறைகளும் சொல்லப்பட்டு இருக்கின்றது. திக்ருடைய வகைகள் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஆரோக்கியமான அந்த வழிகளை நாம் பின்பற்றினால் அந்த வெற்றி இங்கேயும் கிடைக்கும்.அந்த சுகம் இங்கேயும் கிடைக்கும். ஆகுமான வழியில் அதை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கின்ற பொழுது நாம் ஆகாத வழிகளை தேர்ந்தெடுக்கக் கூடாது.இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால்?

இஸ்லாமியர்களை இஸ்லாமை விட்டு வெளியேற்ற முடிய வில்லை. அதனால் இஸ்லாமியர்களை இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத நல்லதைப் போன்று தெரியக்கூடிய சில காரியங்களின் மூலம் அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடக்கிறது. மேலும் சியோனிசம் ஒரு சிந்தனையை விதைத்தது .உலகத்தில் கடவுள் இல்லாத ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்.மதம் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.இதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கொள்கை தான் "எம்மதமும் சம்மதம் " என்பது. நம்மைப் பொருத்தவரை எல்லா மதத்தவர்களுடனும் ஒற்றுமையாக  வாழ வேண்டும்.அனைத்து மதத்தவர்களுடனும் நாம் அன்பாக பாசமாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.அதே சமயத்தில் நமது கொள்கையைப் பொறுத்து நமது மார்க்கத்தில் சொல்லப்படுகின்றவை அது தான் உண்மையானது! மற்றவைகள் உண்மைக்குப் புரம்பானது என்பதில் அழுத்தமான நம்பிக்கையும் விசுவாசமும் நமக்கு இருக்கின்றது.இவ்வாறு தான் ஒவ்வொரு மதத்தவர்களும் அவர்களது மதத்தில் அவர்கள் பிடிப்புடன் இருக்க வேண்டுமென்றால் தங்கள் மதத்தைப் பற்றி உயர்வாகத்தான் கருத வேண்டும்.

அது எப்படி எம்மதமும் சம்மதமாக ஆகும்?  நாம் யோசித்துப்பார்த்தால் அது சாதாரணமாகவே புரிந்து விடும். மதுரை பேருந்து நிலையத்திற்கு ஒருவர் வருகின்றார். அவர் திருச்சி செல்ல வேண்டும்.எந்தப் பேரூந்தில் செல்ல வேண்டும் என்று அவருக்கு தெரிய வில்லை! அறிவிப்பாளரிடம் கேட்டால் அவர், நீங்கள் எந்தப் பேரூந்தில் சென்றாலும் திருச்சி செல்லலாம் என்றார். அது எப்படி செல்ல முடியும்? அங்கு பல ஊர் பேரூந்துகளும் நிற்கின்றனவே. அதில் நெல்லை செல்லும் பேரூந்தும் நிற்கிறது.இதில் ஒருவர் ஏறினால் எப்படி அவர் திருச்சி போக முடியும்? எதிரும் புதிருமான திசைகளில் செல்லக்கூடிய பேரூந்துகள் நிற்கிற போது நாம் கிழக்கு நோக்கி செல்ல வேண்டியது இருக்க மேற்கு நோக்கி செல்லும் பேரூந்தில் ஏறினால் நாம் இலக்கை அடைய முடியுமா ?  இது எப்படி புத்திசாலித் தனமான பதிலாக இல்லையோ! பைத்தியக்காரத் தனமான பதிலோ! அதைப் போல தான் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் நீங்கள் போய் சேர வேண்டிய இடத்தைப் போய் சேர்ந்து விடலாம் என்று சொல்வதும் கிட்டத்தட்ட இதற்கு ஒப்பானது தான்.

நமது கொள்கை மறுமை, மஹ்ஷர், நீதி விசாரனை,சொர்க்கம் நரகம். அவர்களது கொள்கை மறு ஜென்மம்.நமது கொள்கை ஏகத்துவம். அவர்களது கொள்கை பல தெய்வம்.நாம் உருவமில்லாத இறைவனை வழிபடுகிறோம்.அவர்கள் உருவத்தை உண்டாக்கி அதை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி அடிப்படையில் மாற்றமான கொள்கை      களைக் கொண்ட மதங்கள் எப்படி ஒன்றாகும்?.
நம்முடைய மார்க்கம் ஓரிரைக் கொள்கையை வழியுறுத்துகின்றது. பல தெய்வ வழிபாடு அங்கு அடிப்படையாக இருக்கின்றது.சிருஷ்டிகள் யாரையும் வணங்கக் கூடாது என்பது நமது கொள்கை.ஆனால் ஈசா நபியை தேவ குமாரர் என போற்றும் ஒரு மதம் இருக்கின்றது.உஜைர் நபியை அல்லாஹ்வின் குமாரர் என்று சொல்லும் யூத மதம் உள்ளது. இதை எப்படி நாம் ஏற்றுக் கொள் முடியும்? பிராணிகளைப் பொருத்து அல்லாஹ் அதனை நமக்கு உணவாகவும் வாகனமாகவும் வழங்கியுள்ளான்.ஆனால்! அவர்கள் பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள்.எலியை தெய்வத்தின் வாகனம் என்று பூஜை செய்கின்றனர். சூரியனுக்கு பூஜை நடக்கின்றது. சூரிய பகவான் என்று வழிபடுகின்றனர். நதிகளையும் ஆறுகளையும் வழிபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.நாம் இவைகளை விமர்சனம் செய்யவில்லை. ஆனால்! இவைகளை யெல்லாம் ஷிர்க் என்று சொல்லுகின்ற நம்முடை மார்க்கமும் அதனை தெய்வமென கருதி வழிபடுகின்ற மதமும், சைவம் அசைவம் இரண்டையும் அனுமதித்த ஒரு மார்க்கமும் ,அசைவம் ஹராம் என்று சொல்லுகின்ற ஒரு மதமும் எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்? என்பதை நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

“நதிகளெல்லாம் கடலைத் தானே போய் சேருகின்றது” என்ற கவர்ச்சியான ஓர் கூற்றைக் கூறுவார்கள்.நதிகள் மட்டுமா கடலைச் சென்றடைகின்றது? சாக்கடையும் கூடத்தான் கடலைப் போய் சேருகின்றது! அது மட்டுமல்ல இவைகள் ஆதாரங்களல்ல. உதாரணங்கள் தான். உதாரணங்கள் ஒரு விஷயத்தை விளக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதைக்கொண்டு ஒரு விஷயத்தை நிரூபிக்க முடியாது. நிரூபிப்பதற்கு ஆதாரம் தேவை.

அந்த உதாரணங்கள் கூட பொருத்தமானதாக இல்லை.நதிகள் ஏன் கடலைப் போய் சேருகின்றது என்றால்? அது அங்கிருந்து தான் உற்பத்தியாகி வந்தன. இதுவும் ஓர் திரவப் பொருள். அதுவும் ஓர் திரவப் பொருள். இரண்டும் ஒன்றானதே! எனவே அசலுடன் அது போய் சேருகின்றது. ஆனால்! அல்லாஹ்வின் ஏகத்துவ மார்க்கமும் அதற்கு விரோதமான இணை வைக்கும் மதமும் எவ்வாறு ஒரே அல்லாஹ் விடமிருந்து வந்திருக்க முடியும்?

“எல்லா பாதைகளும் ரோமை நோக்கித்தான் செல்கிறது” என்று சொல்லுவார்கள்.அது எப்படி ரோமை நோக்கி செல்ல முடியும்? ரோமின் எதிர் திசையின் பாதை எப்படி ரோமை நோக்கிச் செல்லும்? இதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.(அசலில் இந்த சொல் வழக்கு எப்படி வந்தது என்றால்! கி.பி. 4-ம் நூற்றாண்டில் ரோம சாம்ராஜ்யத்தில் 53000 மைல் தூரத்திற்கு சாலைகள் போடப்பட்டது. அதனால் தான் “ஆல் ரோட்ஸ் லீட்ஸ் டூ ரோம்” என்ற சொற்றொடர் பழக்கத்திற்கு வந்தது) ஆக எம்மதமும் சம்மதம் என்ற  தவறான அடிப்படையில் இது(யோகா) அமைந்துள்ளது.

மேலும் அல்லாஹ் என்று சொல்லி யோகாவில் கலந்து கொள்வதும் கூடாது.தேவ்பந்தில் ஒரு பெரிய வயதான முஃப்தி ஸாஹிப் இருந்தார்கள். அவர்கள் "பைஅத்" வாங்குவதற்காக ஒரு ஷைகை தேடிச் சென்றார். அந்த ஷைகு (பைஅத்தின் நிபந்தனையாக) கூறினார் ; நீங்கள் மத்ரஸாவிற்குச் சென்று மாணவர்களுடன் அமர்ந்து ஹதீஸ் பாடத்தைப் படித்து வர வேண்டும். ஆச்சர்யமான ஓர் உத்தரவு. ஏனெனில் "முஃப்தி" என்ற பட்டம் எப்போது வழங்கப்படும் என்றால்? ஹதீஸ் பாடம் ஓதி முடித்தப் பின்னர் இரண்டு வருஷம் இஃப்தா வகுப்பு பயின்ற பிறகு தான் முஃப்தி பட்டம் வழங்கப் படும்.

 ஏன் இந்த ஷைகு அந்த முஃப்தியைப் பார்த்து இப்படி கூறினார்? ஷைகு அவர்களே அதற்கான காரணத்தைக் கூறினார்கள். நீங்கள் ஆரம்ப காலத்தில் ஹதீஸ் கலையை மத்ஹபை ஏற்காத இமாம்களை மதிக்காத ஒருவரிடம் இருந்து தான் பயின்றீர்கள். எனவே அந்த துர்நாற்றம் உங்கள் உள்ளத்தில் உள்ளது. அது வெளியாக வேண்டும் என்றால்?  ஸுன்னத் வல் ஜமாஅத்தின் உஸ்தாத் முன்னிலையில் நீங்கள் மீண்டும் பயின்று வர வேண்டும் என்றார்கள்.

எனவே ஒரு காஃபிரிடமிருந்து ஒரு கலிமாவை அவர் கூற அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு அதை நாமும் சொல்ல அல்லது நினைத்துக் கொண்டு யோகாவில் கலந்து கொண்டால் அது ஷிர்க் அல்லது குஃப்ரின் நெடி நம் உள்ளத்திற்கு வந்து விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆன் தான் ஓதுகின்றோம். ஹதீஸ் தான் ஓதுகின்றோம். ஆனால் அதைக்கூட நாம் யாரிடம் ஓத வேண்டும் என்றால் உண்மையான "ஸுன்னத் வல் ஜமாஅத்தின் " ஆலிமிடம் ஓத வேண்டும். இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூஸா நபி (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம்  தவ்ராத். அது உண்மையான வேதம் தான். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் அந்த வேதத்தை நான் தொழுகையில் ஓதலாமா? என்று கேட்ட பொழுது "ஓ ஈமான் கொண்டவர்களே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" (2 ; 208) என்று அல்லாஹ் வசனத்தை இறக்கினான். அந்த வேதம் அல்லாஹ்வின் வேதம் தான். அல்லாஹ் சொன்னது தான் .மாற்றப்படாத வேதம்  தான் அவரிடம் இருந்தது.ஆனால் ஓதக் கூடாது என்று அல்லாஹ்  சொல்லி விட்டான் என்றால், அனுமதிக்கப் பட்ட விஷயம் கூட அது முறையாக இல்லை என்று வருகிற பொழுது தடுக்கப் படுகின்றது.

ஆக யோகா என்பது ஏன் கூடாது என்றால்,
ஒன்று ; அது ஷிர்க்கின் அடிப்படையில் அமைந்தது.

இரண்டாவது ; எம்மதமும் சம்மதம் என்ற இஸ்லாத்திற்கு முரணான கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.

மூன்றாவது ; அதில் அல்லாஹ் என்று சொன்னாலும் நினைத்தாலும் அது கூடாது. ஏனென்றால், அந்த அல்லாஹ்வை சொல்லித்தரும் குருவானவர் அல்லாஹ்வை உள்ளது உள்ள படி ஏற்றுக் கொள்ளாதவர்.

நான்காவது ; முஸ்லிம்களில் வழிகெட்டவர்களிடம் குர்ஆன் ஹதீஸை ஓதினால் அதை கற்றுக் கொண்டால் அந்த உஸ்தாதின் வழிகேடும் சேர்ந்து நமக்குள் சென்று விடும். அவ்வாறிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களைக் குருவாக ஏற்றுக் கொண்டு நாம் எந்தப் பயிற்சியை செய்தாலும் அவர்களின் ஷிர்க்கான அந்தக் கொள்கைகளும் சேர்ந்து உள்ளே சென்று விடும்.

எனவே எந்த வகையிலும் "யோகா "என்பது அது ஈமானுக்கு உலை வைக்கக் கூடியது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்னும் நிறைய விஷயம் இருக்கின்றது. என்றாலும் நீங்கள் விளங்கிக் கொள்ள இந்த விஷயங்கள் போதுமானது என்ற அடிப்படையில் நான் நிறைவு செய்கின்றேன்.

யோகாவை அது ஒரு மதம் சார்ந்த வழிபாடு என்ற காரணத்தினால் இஸ்லாத்தில் அதற்கு அனுமதி இல்லை.இதல்லாமல் மதம் சாராத மதசார்பற்ற உடற்பயிற்சி அது அனுமதிக்கப்பட்டது.அதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை.
எனவே நாம் நிம்மதி பெறுவதற்கும் வெற்றி அடைவதற்கும் அல்லாஹ் இன்னும் ரசூலின் வழியே நமக்கு போதுமானது.குர்ஆனைக் கொண்டு நாம் நிம்மதி பெற முடியும். திக்ரைக் கொண்டு நாம் நிம்மதி பெற முடியும்.அந்த சத்திய மார்க்கத்தை நாம் பின்பற்றுவதற்கு அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக! ஆமீன்.

No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks