Wednesday, 10 August 2016

இறைவா! உன் நேசத்தைத் தேடி.......!

                    
                                                    

நபி அவர்கள் கூறினார்கள் ;
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ دَاوُدُ عَلَيْهِ السَّلامُ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ الْعَمَلِ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ ، رَبِّ اجْعَلْ لِي حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ أَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ

நபி தாவூத் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்...... நான் உனது நேசத்தையும், உன்னை யாரெல்லாம் விரும்புவார்களோ அவர்களின் நேசத்தையும், எந்த அமல் உனது அன்பின் பக்கம் கொண்டு சேர்க்குமோ அந்த அமலின் நேசத்தையும் கேட்கிறேன்.நான் என்னையும்,என் குடும்பத்தையும்,குளிர்ந்த நீரையும் பிரியப்படுவதை விட உன் மேல் கொண்ட நேசத்தை எனக்கு மிகவும் உகந்ததாக நீ ஆக்கி வைப்பாயாக என்று பிரார்த்தனை செய்து வந்தார்கள். (திர்மிதி)


நபிமார்கள்,நபிகள் நாயகம் அவர்கள், நாயகத்தின் தோழர்கள் மற்றும் இறைநேசர்கள் கேட்டு வந்த துஆக்களை நாமும் நமது வாழ்க்கையில் அவசியமாக கேட்டு வர வேண்டும்.

நாம் அல்லாஹ்வை பிரியப்பட வேண்டும்.நாம் அல்லாஹ்வை பிரியப்பட வேண்டும் என்றால் முதலில் அல்லாஹ் நம்மை பிரியப்பட வேண்டும்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான் ;

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَن يَرْتَدَّ مِنكُمْ عَن دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
5:54.முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; விமர்சிப்பவர்களின் விமர்சனத்திற்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமான வனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக  இருக்கின்றான்.

நமக்கு அல்லாஹ்வின் மீது பிரியம் இருக்கிறது என்றால் அல்லாஹ்வுக்கு நம்மீது பிரியம் இருக்கிறது என்று பொருள்.இதை மேற்கூறிய வசனம் தெளிவுபடுத்துகிறது. இந்த அன்பை அல்லாஹ் நமக்கு நஸீபாக்கி நல்க வேண்டும் என்றால் நாம் அல்லாஹ்விடம் துஆ செய்து அதைக் கேட்டுப் பெற வேண்டும்.

யாஅல்லாஹ் நானும் உன்னை விரும்ப வேண்டும், நீயும் என்னை விரும்ப வேண்டும்.இந்த இரு பக்க அன்பையும் எனக்கு நஸீபாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் கரம் ஏந்த வேண்டும்.

மட்டுமல்ல, நாம் அல்லாஹ்வை விரும்புகிறோம் என்பதற்கான அடையாளம் என்னவென்றால், அல்லாஹ்வை நேசித்தவர்களின் நேசமும் நமக்கு இருக்கும். அல்லாஹ்வை நேசித்த இறைநேசர்களை, வலிமார்களை நாமும் நேசிக்க வேண்டும். அப்படி நேசிப்பவர்களாக நாம் இருந்தால் அது அல்லாஹ் நம்மை நேசிக்கின்றான் நாமும் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்பதற்கான ஆதாரமாகும்.

அன்றொரு நாள் ஹழரத் இப்ராஹிம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள்.அதில் இருவர் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையில் பெயர் பட்டியல் ஒன்று இருந்தது. அவர்களிடம் இப்ராஹிம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் இது என்ன பெயர் பட்டியல் எனக்கேட்டர்கள். இது அல்லாஹ்வினுடைய நேசர்களின் பெயர்கள் என்றார்கள். இதில் எனது பெயர் உள்ளதா....? எனக் கேட்டார்கள். உங்கள் பெயர் இதில் இல்லை என்று பதில் கூறப்பட்டது. அப்போது இப்ராஹிம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் அப்படியென்றால் இந்த நேசர்களை நேசிப்பவர்களின் பெயர் பட்டியலில் எனது பெயரை முதன்மையாக எழுதிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

அதற்குப் பிறகு கண்ட கனவில் வலிமார்களின் பெயர் பட்டியலில் தங்கள் பெயர் முதலில் இடம் பெற்றிருப்பதைப் பார்த்தார்கள்.

எனவே நாம் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்றால் முதலில் அல்லாஹ்வை நேசிப்பவர்களை நேசிக்க வேண்டும். அப்போது தான் அந்த நேசம் முழுமையாகும்.

பா யஸீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் ;
உண்மையான நேசம் எதுவென்றால் நீ யாரை நேசிக்கின்றாயோ அவருக்கு நீ எவ்வளவு  கொடுத்தாலும் அது உனக்கு குறைவாகத் தெரிய வேண்டும்.அவர் கொஞ்சமாக தந்தாலும் அதை நீ அதிகமாகக் கருத வேண்டும்.

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ قِيلَ لَهُمْ كُفُّوا أَيْدِيَكُمْ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ ۗ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا
4:77. உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதிலிருந்தும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தைக் கொடுத்தும் வருவீர்களாக!என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்க வில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே  மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: இவ்வுலகத்தின் சுகப்பொருட்கள் அற்பமானது, மறுவுலக (இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.
إِ
نَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا
33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தி யிருக்கின்றான்.

இவ்வுலகத்தில் நாம் அனுபவிக்கும் அல்லாஹ்வின் நிஃமத்துக்கள் அதை எண்ணினால்,எண்ணி முடிக்க முடியாத அளவிற்கு அதிக மதிகம் இருக்கிறது. (அல்குர்ஆன் :16 ;18) அத்தகைய கணக்கிட முடியாத அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற நிஃமத்துக்களை அல்லாஹ் சொல்லும் போது அது குறைவானது என்று சொல்கிறான்.ஆனால் அற்ப ஆயுளில் நாம் செய்யும் கொஞ்ச நேர திக்ரை அதிகமானது என்று சொல்கிறான்.இது அல்லாஹ்விற்கு நம்மீது பிரியம் இருக்கிறது என்பதின் வெளிப்பாடு.

நேசிப்பவன் யாரை நேசிக்கிறானோ அவர் தருவது கொஞ்சமாக இருந்தால் அது அதிகமாக அவனுக்குத் தெரிகிறது.காதல் உண்மையாக இருக்கும் போது நாம் எவ்வளவு கொடுத்தாலும் அது குறைவாகத்தான் தெரியும்.இது இந்த வசனங்களில் உறுதிபடுத்தப்படுகிறது.

பிரியம் இருக்கிறது என்பதற்கான அடையாளத்தை யஹ்ய ப்னு முஆத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ;
உண்மையான நேசம் எப்படி இருக்கும் என்றால்,நாம் யாரை நேசிக்கிறோமோ அவர் நம்மை வெறுத்தாலும் நமது அன்பு குறையக் கூடாது. அவர் நமக்கு உதவி செய்தாலும் நமது அன்பு கூடக்கூடாது.

கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும், நீ என்னை அன்பாக பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் நான் உன்னை பிரியப்படத் தான் செய்வேன் என்பது காதலின் வெளிப்பாடாகும்.

அதன் பின்பு அல்லாஹ்வின் நேசத்தின் பக்கம் கொண்டு போய் சேர்க்க கூடிய நல்ல அமல்களின் மீதும் நமக்கு நேசம் வர வேண்டும்.

தொழுகை,நோன்பு,தர்மம் போன்ற நல்லமல்களின் மீது நமக்கு பிரியம் ஏற்பட வேண்டும். ஏனென்றால் இவைகளெல்லாம் அல்லாஹ்வின் அளவில் நம்மைக் கொண்டு சேர்க்கும் காரணிகளாகும்.பிரியமான வனின் அளவில் கொண்டு போய் சேர்க்கும் காரணிகளும்,வழிகளும் நமக்குப் பிரியமானதாக இருக்க வேண்டுமல்லவா ?

உலகில் பிறந்த எல்லா மனிதனும் அனைத்தைக் காட்டிலும் முதலில் தன்னை விரும்புகிறான். தன் குடும்பத்தை நேசிக்கின்றான். இந்த நேசம் தவறில்லை. இஸ்லாமும் அதைத் தான் வலியுறுத்துகிறது. ஆனால் அத்தகைய அந்த பிரியத்தைக் காட்டிலும் அதிகம் அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் நேசிப்பவனாக இருக்க வேண்டும்.

நபி அவர்களின் உறவினர்களை நேசிக்குமாறு இந்த உலக மக்களை நோக்கி கூறும்படி  அல்லாஹ் நபி அவர்களிடம் சொல்கின்றான்.

ذَٰلِكَ الَّذِي يُبَشِّرُ اللَّهُ عِبَادَهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ۗ قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَىٰ ۗ وَمَن يَقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهُ فِيهَا حُسْنًا ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ شَكُورٌ
42:23. ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.

மேற்குறிய வசனத்தை நாம் சிந்திக்கும் போது ஒவ்வொருவரும் தன் குடும்பத்தை நேசிக்க வேண்டும். ஆனால் அந்த நேசத்தைக் காட்டிலும் அல்லாஹ்,ரசூலுடைய நேசம் அதிகமாக இருக்க வேண்டும்.

உலகத்தில் நாம் எதையும் நேசிக்க கூடாது, அனைத்தையும் துறக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்ல வில்லை.எதையெல்லாம் நேசிக்க வேண்டுமோ அதையெல்லாம் நேசிக்க வேண்டும்.ஆனால் அல்லாஹ்,ரசூலின் நேசம் அதை விட அதிகமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் குளிர்ந்த நீரை விரும்புவது இயற்கை.
குளிர்ந்த நீரை பிரியப்பட வேண்டும். மகான்மார்களில் ஒருவர் கூறுகிறார் ; நான் குளிர்ந்த நீரை அருந்தினால் என் மனதின் அடி ஆழத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ஷுக்ரு (நன்றி செலுத்துதல்) வெளிப்படுகிறது.

குளிர்ந்த நீரை விரும்பலாம். ஆனால் அந்த நீரின் மீது இருக்கும் பிரியத்தை விட அல்லாஹ், ரசூலின் மீது பிரியம் அதிகமாக இருக்க வேண்டும்.

நபி அவர்கள் நபி தாவூத் (அலை) அவர்களின் துஆவின் மூலம் இவைகளை நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

ஒருமுறை இப்னுஸ் ஸம்மாக் என்ற மாமேதை கலீஃபா ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்களிடம் வருகிறார்கள்.பாதுஷா அவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் குவலையை வாயை நோக்கி உயர்த்திக் கொண்டிருப்பதைக் கண்ட இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் கலீஃபா அவர்களே! சற்று தாமதியுங்கள் என்று சொல்லி உள்ளே வந்து அமர்ந்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ; இந்த தண்ணீர் குடிக்க நீங்கள் தடை செய்யப்பட்டால்,இந்த தண்ணீர் உங்களுக்கு மறுக்கப்பட்டால் அதை என்ன விலை கொடுத்து நீங்கள் வாங்குவீர்கள் ? என்றார்கள்.அப்போது என் ராஜாங்கத்தின் பாதியைக் கொடுத்து அதை வாங்குவேன் என்று கலீஃபா அவர்கள் பதில் சொன்னார்கள்.சரி இப்போது நீங்கள் குடிக்கலாம் என்று இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் கூற கலீஃபா அவர்களும் அதை குடிக்கிறார்கள்.இப்போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்னொரு கேள்வி கேட்கிறேன் ; குடித்த அந்த நீர் வெளியே வர வில்லையென்றால் அதற்காக எவ்வளவு செலவு செய்வீர்கள் ? என்றார்கள்.அதற்கு கலீஃபா அவர்கள் என் முழூ ராஜாங் கத்தையும் கொடுத்து அதற்கு மருத்துவம் பார்ப்பேன் என்று கூறினார் கள்.

அப்படியென்றால் உங்களது மொத்த ராஜாங்கம் இந்த ஒரு குவலை தண்ணீருக்கு சமமானது தான்.இந்த நிலையிலுள்ள ராஜாங்கத்திற்காக வேண்டி பெருமை கொள்வது,போட்டியிடுவது,எதிர் பார்ப்பது,விரும்பு வது தகுமா ?என்று கூறி தன் அருளுரையை நிறைவு செய்தார்கள்.

இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் பெரிய சூஃபி மகானாக இருந்தார்கள். வருகிற போது பாதுஷா அவர்களுக்கு இதுபோன்ற உணர்த்துகின்ற பல உபதேசங்கள் செய்வதுண்டு.உணர்வுப்பூர்வமான இந்த உபதேசம் கண்டு பாதுஷா அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.தாடி நனைந்து விட்டது.

குளிர்ந்த நீர் எந்தளவு மனிதனுக்கு விருப்பமானது என்றால், அது கிடைக்க வில்லையென்றால் ராஜாங்கத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அதைக் குடிப்பான்.அந்தளவிற்கு குளிர்ந்த நீரின் மீது மனிதனுக்குப் பிரியம் இருப்பது இயற்கையாக இருக்கிறது.அந்தக் குளிர்ந்த நீரை விட அல்லாஹ்,ரசூலின் பிரியம் அதிகமாக இருக்க வேண்டும்.அதை அல்லாஹ்விடம் கேட்டுப்பெற வேண்டும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய நேசத்தையும் அவனை நேசித்தவர்களின் நேசத்தையும் நமக்கு வழங்குவானாக. அனைத்தைக் காட்டிலும் அல்லாஹ்வுடைய நேசத்தையும், அவனுடைய ரசூலின் நேசத்தையும் அதிகமானதாக ஆக்குவானாக! ஆமீன்.


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks