Sunday 21 August 2016

நம்பினோர் கெடுவதில்லை

                    

நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறையின் தீர்ப்பு.
வாழ்க்கை என்பது தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கில்லை. அதில் மேடு பள்ளம், ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். வாழ்க்கைப் படகை செலுத்தும் மனிதன் பள்ளத்தில் விழுந்து விடாமல் சுழியில் அமிழ்ந்து விடாமல் இருக்க துடுப்பைப் பயன்படுத்த வேண்டும். அந்த துடுப்பின் பெயர் தான் ஈமான் - தன்னம்பிக்கையாகும்.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மனிதன் சவாலாக எடுத்துக் கொண்டு சாதனை படைக்க வேண்டுமே தவிர சோர்ந்து போய் அமர்ந்து விடக் கூடாது.

புகழ்பெற்ற கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் கூறுகிறார் ;
சூரியன் மறைந்து விட்டதே என கவலை கொண்டால் நட்சத்திரங்களின் அழகை உன்னால் ரசிக்க முடியாது      

மகா கவிஞர் அல்லாமா இக்பால் அவர்கள் கூறினார்கள் ;
                தேய்பிறையே கவலை கொள்ளாதே!
       உன்னில் பூரண சந்திரன் மறைந்திருக்கிறான்.

இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு ஒரு வாசலை அடைத்தால் இரண்டு வாசலை திறப்பான். இரண்டு வாசல்களை அடைத்தால் நான்கு வாசல்களை திறப்பான். நான்கு வாசல்களை அடைத்தால் எட்டு வாசல்களை அல்லாஹ் திறப்பான். இதுவே அல்லாஹ்வின் நியதியாக வும் ஏற்பாடாகவும் அமைந்திருக்கிறது.

நம்மைப் படைத்த பின் அல்லாஹ் நம்மை கைவிட்டு விட வில்லை. நம்மை கரை சேர்ப்பதற்கான காரியங்களையும் நம்மோடு சேர்த்து வைத்திருக்கிறான். நாம் தான் அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

கருவில் வளரக்கூடிய சிசுவிற்கு உணவு ஒரு வாசல் வழியாக அதாவது, தொப்புள் கொடியின் வழியாகச் செல்கிறது. ஒரு பெண் கர்ப்பம் தரித்து விட்டால் அவளுக்கு மாதா மாதம் வரக்கூடிய தீட்டு இரத்தம் சுத்தீகரிக்கப்பட்டு உணவாக தொப்புள் கொடியின் வழியாகச் செல்லும்.

குழந்தை பிறந்த உடன் நாம் செய்யும் முதல் வேலை அந்த தொப்புள் கொடியை அறுத்து விடுகிறோம். உணவு வந்து கொண்டிருந்த ஒரு வாசல் அடைபட்ட பிறகு அல்லாஹ் அந்த குழந்தைக்காக இரு வாசல்களை தாயினுடைய இரு மார்பகங்களை பாலூட்டுவதற்கு உணவிற்கான வாசலாக திறக்கின்றான்.

குழந்தைக்கு தாய் பாலூட்டும் போது மார்பகத்தில் பால் குறைகின்றது. மறு பக்கம் மாற்றி கொடுப்பதற்கு அந்த குழந்தையை மாற்றுகின்ற போது அந்த குழந்தை தனக்கு கிடைத்துக் கொண்டிருந்த சுவையான பாலை நிறுத்துகிறார்கள் என நினைத்து வீறிட்டு அழுகின்றது. மறு பக்கம் வைத்து பால் கொடுக்கின்ற போது பால் குபுகுபுவென பீறிட்டு வருகின்றது.அதைப்பருகி குழந்தை சந்தோஷமடைகிறது.

கௌதுல் அஃலம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் ;
அல்லாஹ் மனிதனை சோதிப்பதற்காக அதுவரை அவனுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு நிஃமத்தை நிறுத்தினால் தண்டிப்பதற்காக வேண்டி நிறுத்துகிறான் என்பது மட்டுமல்ல, அதை விட சிறந்த ஒன்றை வழங்குவதற்காகவும் தான் சோதிக்கின்றான்.

இறைநியதியை விளங்காதவன் தனக்கு ஓர் சோதனை வருகிற போது அதை தனக்குரிய தண்டனையாக நினைக்கிறான்.ஆனால் அது அவனுக்கு தண்டனையல்ல.அவனுக்கு அதை விட அதிகமான அருளை சொரிவதற்காக அல்லாஹ் செய்யும் ஏற்பாடு என்பதை அவன் விளங்கு வதில்லை.  

மனிதனுடைய கஷ்டம் எதற்காக வருகிறது என்றால் நம்மிலே இருக்கும் திறமைகள்,சாதனைகள்,சக்திகளை வெளியே கொண்டு வருவதற்காக வேண்டி அல்லாஹ் செய்யும் ஏற்பாடு தான் அது.

  • ஜைத்தூனை பிழிகின்ற போது தான் தூய்மையான,தெளிவான ஆலிவ் ஆயில் நமக்கு கிடைக்கின்றது.

  • பழங்களை கசக்கி பிழிகின்ற போது தான் சுவையான பழரசம் கிடைக்கின்றது.

மனிதனையும் அல்லாஹ் கவலைகளால்,சோதனைகளால், நெருக்கடி களால்,துன்பங்களால் கசக்கி பிழிகின்றான். இதுவெல்லாம் நம்மிலே இருக்கும் ஈமானின் சுவையை வெளிப்படுத்துவதற்காகத்தான்.

ஈமானுக்கும் சுவை இருக்கிறது. அது சோதனையின் போது தான் வெளிப்படுகிறது.மனிதனுக்கு அந்த ஈமானின் சுவையை சுவைக்க வைப்பதற்குத்தான் அந்த சோதனை.

குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்கப்பட்டு ஒரு வாசல் அடைக்கப்பட்டால் மார்பகங்களின் மூலம் இரு வாசல்களை அல்லாஹ் திறந்து விடுகிறான். இஸ்லாம் பால்குடி காலமாக கூறும் இரண்டு வருடத்திற்கு பிறகு தாய் பால்குடியை நிறுத்தி விடுகிறாள். இரண்டு வாசல்களையும் அடைத்து விடுகிறாள். இப்போது அல்லாஹ் அந்த குழந்தைக்கு நான்கு வாசல்களை திறந்து விடுகிறான்.

இரண்டு உணவின் வாசல்களையும் இரண்டு குடிப்பின் வாசல்களையும் அல்லாஹ் திறந்து விடுகிறான். இரண்டு உணவு என்றால் சைவம், அசைவம், இரண்டு குடிப்பு என்றால் தண்ணீர், பால். இந்த நான்கின் மூலம் உருவாகக் கூடிய பல்வேறு வகையான உணவுகளையும் குடிபானங்களையும் அந்த மனிதனுக்கு இந்த உலகில் வாழும் கால மெல்லாம் திறந்து வைத்திருக்கிறான்.

எப்போது மனிதன் மரணித்து விடுகிறானோ அப்போது இந்த நான்கு வாசல்களும் அடைபட்டு விடுகிறது. அவன் இவ்வுலகில் ஈமான் கொண்டு முஃமினாக வாழ்ந்து ஸாலிஹான நற்கருமங்களை செய்திருந்தால் அதன் பிறகு அல்லாஹ் அவனுக்கு சுவனத்தின் எட்டு வாசல்களை திறந்து விடுகிறான்.

மனித வாழ்வுக்கு தொடக்கம் இருக்கிறது. அதற்கு முடிவில்லை. மரணம் என்பது சோகமானது அல்ல.சுகமானது.மரணம் என்பது வாழ்க்கையின் எல்லைச்சுவரல்ல.அது மறு உலகிற்கான கதவு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியன் மறைவது உதிப்பதற்காக,
மனிதன் பிறப்பது இறப்பதற்காக.
கட்டுவது இடிப்பதற்காக என்பார்கள்.

மனிதன் இறப்பது மறு உலகத்தில் பிறப்பதற்காக வேண்டி, கட்டிடத்தை இடிக்கிறார்கள் என்றால் அதை விட அழகான கட்டிடத்தை கட்டுவதற் காக வேண்டித்தான்.

இந்த தாத்பரியத்தை ஸஹாபாக்கள் நன்கு விளங்கியிருந்தார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ ، قَالَ : دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللهِ وَهُوَ يَمُوتُ ، فَقُلْتُ : اقْرَأْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ السَّلاَمَ.
மரணப்படுக்கையில் நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்த ஜாபிர் (ரலி) அவர்களிடம் முஹம்மது பின் முன்கதிர் (ரலி) அவர்கள், ஜாபிர் அவர்களே! நபி அவர்களுக்கு எனது ஸலவாத்தை எத்தி வைய்யுங்கள் என்று ஸலாம் சொல்லினார்கள். (மிஷ்காத் : ஹதீஸ் எண் ; 1628, இப்னு மாஜா : ஹதீஸ் எண் ; 1450)

ஸஹாபாக்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிந்து போவதற்குப் பெயரல்ல.அது நகர்ந்து செல்வதற்கான சாலை என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் தான் இப்படி ஸலாம் சொல்லி அனுப்பினார்கள்.
لما مات بشر بن البراء بن المعرور وجدت امه وجدا شديدا فقالت يا رسول الله لا يزالا الهالك يهلك من بني سلمة فهل تتعارف الموتي فارسل الي بشر بالسلام قال نعم والذي نفسي بيده انهم يتعارفون كما يتعارف الطير في رؤوس الاشجار وكان لا يهلك هالك من بني سلمة الا جاءته ام بشر فقالت يا فلان عليك السلام فيقول وعليك فتقول اقرأ علي بشر مني السلم

பிஷ்ர் பின் அல்பர்ரா (ரலி) என்ற ஸஹாபி இறந்து விட்டார்கள். அவரின் தாய் நபி நபியவர்களிடம் வந்து யாரசூல்லலாஹ்! எனது மகன் இறந்து விட்டான். அவனுக்கு நான் ஸலாம் சொல்லி அனுப்பலாமா ? எனக் கேட்டார்கள். நபியவர்கள் தராளமாக சொல்லி அனுப்பலாம். மரத்தின் உச்சியிலிருக்கும் பறவை எப்படி தன் இனப்பறவைகளை துல்லியமாக அறிந்து கொள்கிறதோ அது போல இறந்தவர்கள் தன் இனத்தவர்களை துல்லியமாக அறிந்து கொள்கிறார்கள் என்றார்கள். அதன் பிறகு அந்தப் பெண்மணி யாராவது மரணப்படுக்கையில் இருந்தால் தன் மகனுக்கு ஸலாம் சொல்லி அனுப்பக் கூடியவர்களாக இருந்தார்கள். (மிர்காத் (1) )

இன்று நாம் உலக வாழ்க்கையோடு ஒன்றிப்போய் விட்டோம். பிரிந்து செல்வதற்கு மனமில்லை. அப்படி பிரிந்து சென்றாலும் நாம் எங்கே செல்வோம் என்பதில் மனதில் உறுதியில்லை.


قال السيوطي واخرج البخاري عن خالدة بنت عبدالله بن انيس قالت جاءت ام انيس  بنت ابي قتاتة بعد موت ابيها بنصف شهر الي عبدالله بن انيس وهو مريض فقالت يا عم اقرأ ابي السلام كذا في شرح الصدور
அபூகதாதா (ரலி) அவர்களின் மகள் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு ஆறு மாதங்கள் கழித்து அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் நோய்வாய்ப் பட்டிருக்கும் போது அந்தப் பெண்மணி எனது சிறிய தந்தை அவர்களே! எனது தந்தையைப் பார்த்தால் எனது ஸலவாத்தைத் தெரிவியுங்கள் என்றார்கள். இதைக் கேட்ட அவரும் கோவப்படவில்லை.

ولما احتضر بلال رضي الله عنه نادت امرأته واحزناه! فقال واطرباه! غدا القي الاحبة محمدا وحزبه
ஹள்ரத் பிலால் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது, அவரது மனைவி எனது துக்கமே! என்று அழுத போது பிலால் (ரலி) அவர்கள், இல்லை இல்லை சந்தோஷமே! மகிழ்ச்சியே! நாளை நான் எனது பிரியமானவர்களையெல்லாம் சந்திப்பேன். முஹம்மது நபி அவர்களையும் அவர்களது தோழர்களையும் சந்திப்பேன் என்றார்கள்.(2)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " تُحْفَةُ  الْمُؤْمِنِ الْمَوْتُ " رواه البيهقي في شعب الايمان
முஃமினுக்குப் பரிசு மரணமாகும். (மிஷ்காத் : ஹதீஸ் எண் ;1604)

நாம் முஃமினாக வாழ்ந்தால் வாழ்க்கை என்பதும் மரணம் என்பதும் மகிழ்ச்சி தான்.

சத்தியப் பாதையில் வாழ்ந்து ஸாலிஹான நற்கருமங்களை செய்து வந்தால் மட்டற்ற மகிழ்ச்சி இந்த உலகத்தில் மட்டுமல்ல மறு உலகத்திற்கு செல்லும் மரணமும் கூட மிகப்பெரிய சந்தோஷமாக அமைந்து விடும். இப்படிப்பட்ட ஒப்பற்ற தத்துவத்தை உடையது தான் இஸ்லாமிய மார்க்கமாகும்.

இவ்வுலக வாழ்க்கையில் நாம் சோர்வடைவதற்கும் கவலைப் படுவதற்கும்  அவசியமில்லை. ஏனென்றால் அல்லாஹ் நமக்காக திறந்த வாசலை மூடுவதற்கு எவருக்கும் சக்தியில்லை. அதை அடைத்தால் அதை திறப்பதற்கும் யாருக்கும் சக்தியில்லை.

ஒரு கிராமவாசி மரணப்படுக்கையில் இருந்தார். அவர் நான் எங்கே செல்கிறேன் எனக் கேட்டார். அல்லாஹ்விடம் செல்கிறீர்கள் என்றார்கள். இதுவரை எனது வாழ்க்கையில் எல்லா நிஃமத்துகளையும், சந்தோஷங்களையும்  கொடுத்து என்னை சந்தோஷமாக வைத்திருந்த அந்த அல்லாஹ்விடம் செல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும் ? என்றார்.

அல்லாஹ்வைப்பற்றிய நல்ல எண்ணம் நமக்கு வந்தால் நமது மரணம் கூட மகிழ்ச்சியாக மாறி விடும்.

வாழ்க்கையை பிரச்சனைக்குரியதாக மாற்றி நமக்கு நாமே கஷ்டம் கொடுத்துக் கொள்ளக் கூடாது. அல்லாஹ்வின் நேசர்கள் வாழ்க்கை யின் தத்துவத்தை புரிந்து கொண்டவர்கள் எனவே தான் அவர்களைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில்
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
அவர்களுக்கு பயமும் இல்லை துக்கமும் இல்லை என்றான்.

கடந்து போன காலத்தை நினைத்து கவலையும் படமாட்டார்கள். எதிர்காலத்தை நினைத்து அச்சமும் பட மாட்டார்கள். அந்த உயர்ந்த வாழ்க்கையை நாம் நம்ப வேண்டும் என்று தான் இஸ்லாம் சொல்கிறது.

من اجمل كلام الشافعي رح "اذا تجلي الناس عنك في كرب فاعلم ان الله يريد ان يتولي أمرك" "وكفي بالله وكيلا" 
"கஷ்டத்தில் நீங்கள் நம்பிய எதிர்பார்த்த மக்கள் உங்களை விட்டும் விலகிப்போனால் அல்லாஹ் உங்கள் காரியத்தில் நேரடியாக பொறுப் பேற்கப் போகிறான் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்" என்பது இமாம் ஷாஃபிஈ )ரஹ்( அவர்களின் அழகிய பொன்மொழிகளில் ஒன்று.

நபி அவர்களுக்கு ஆதரவாக துணையாக இருந்த கதீஜா (ரலி) அம்மையார் இறந்த போது கவலையுற்றிருந்த நபி அவர்களை அல்லாஹ் மிஃராஜிற்கு அழைத்து நான் உங்களை என் பொறுப்பில் எடுத்துக் கொண்டேன்,கவலைப்படாதீர்கள் என்று கூறினான்.

இது போன்ற உறுதியான ஈமான் இருந்தால் அந்த பாக்கியம் நமக்கும் கிடைக்கும்.நம் அனைவருக்கும் அத்தகைய பாக்கியத்தை வழங்கி அருள் புரிவானாக! ஆமீன்.
    
            -(1)
اخرجه ابن ابي الدنيا كذا في المرقاة شرح المشكاة تحت حديث لما حضرت كعبا الوفاة اتته ام بشر بنت البراء بن المعرور فقالت  يا ابا عبد الرحمن ان لقيت فلانا فاقرأ عليه مني السلام الخ رقم 1626 
மிஷ்காத்தில்  1626 வது  ஹதீஸின் ஷரஹில் இடம் பெற்றுள்ளது.

-(2)
 كذا في الشفا للقاضي عياض في الفصل الثالث من الجزء الثاني

1 comment:

  1. அல்ஹம்து லில்லாஹ்! அருமையான சிந்தனை. ஹதீதுகளில் கிதாபும் ஹதீத் இலக்கமும் இருந்தால் இன்னும் சிறப்பு உஸ்தாத்

    ReplyDelete

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks