Tuesday, 23 August 2016

மனிதமாக்கும் மகா சக்தி

                     


மனிதனை மற்ற உயிரினங்களை விட வேறுபடுத்திக் காட்டும்  மகத்தான சக்திகள் இரண்டு.1,பேச்சாற்றல். 2,எழுத்தாற்றல்.இந்த இரு ஆற்றல்களும் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே மனிதனை மனிதனாக்கும் இந்த இரு சக்திகளை நாம் எதற்குப் பயன்படுத்த வேண்டும்?
நம்மை மனிதனாகப் படைத்த அல்லாஹ்வுக்காக, அவனின் பக்கம் அழைப்பதற் காக பயன்படுத்த வேண்டும். 

அருமை நபி அவர்களின் அருமை பெருமைகளை, ஆளுமைத் திறமைகளை, அவர்கள் அறிமுகம் செய்த இஸ்லாத்தின் கொள்கை விளக்கங்களை பேச்சாற்றல் வழியாகவும், எழுத்தாற்றல் வழியாகவும் இவ்வுலகிற்கு வெளிபடுத்த வேண்டிய கடமை உள்ளவர்களாக நாம் இருக்கிறோம்.

அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.
" " إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمُ "
அல்லாஹ் முதன் முதலில் பேனாவைப் படைத்தான். (திர்மிதி :ஹதீஸ் எண் ; 3319)

இந்தப் பேனா விதியை எழுதிய பேனாவாகும். பேனா என்பது எழுத்துலகின் அஸ்திவாரம். அல்லாஹ்வினுடைய முதல் படைப்பு என்று வருகின்ற போது பேனா படைப்பாற்றல் மிக்கது என்று தெரிகிறது.

பேனாவிலிருந்து வெளிப்படும் எழுத்துக்கள் எழுச்சி மிக்கது, உயிர்ப்பிக்கும் சக்தி மிக்கது. உலகின் சரித்திரத்தை எழுதக்கூடியது மட்டுமல்ல, சரித்திரம் படைக்கக் கூடியது. உலகின் வரலாற்றை நிர்ணயிக்கக் கூடியது. எழுத்தாற்றல் என்பது மக்களின் மனதையும் மாற்றி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி பெரும் அரசியல் புரட்சியை உண்டு பண்ணக்கூடியது என்பதற்கு இன்று நடக்கும் நிகழ்வுகள் சான்றாக இருக்கிறது.
ن ۚ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
68:1. நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ
68:2. உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
68:3. இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.

இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனத்தை, நபி அவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை பேனாவைக் கொண்டு எழுத்தாற்றலின் மூலமாக முறியடிக்க வேண்டும் என்பது மேற்கூறிய வசனம் கூறும் அழுத்தமான செய்தியாகும்.
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
96:2. அலக்என்ற நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான்.
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

இது திருக்குர்ஆனின் ஆரம்ப வரிகளாகும். முதல் வசனம் பேச்சாற்ற லையும் நான்காவது வசனம் எழுத்தாற்றலையும் எடுத்து இயம்புகிறது. முதல் வசனம் மெஞ்ஞானத்தையும் இரண்டாவது வசனம் விஞ்ஞானத்தையும் எடுத்துரைக்கிறது.

இஸ்லாத்தையும், வேதத்தையும் இந்த இரு ஆற்றல் கொண்டு உலகில் பரப்ப வேண்டும்.அவ்வாறே விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் கொண்டு பரப்புரை செய்ய வேண்டும் என்பது ஆரம்பமாக இறங்கிய வேத வாக்கியங்கள் வெளிப்படுத்தும் கட்டளைகளாகும். இந்த இரு ஆற்றலும் மகத்தான சக்தி கொண்டது.

அல்லாமா தஃப்தாஸானி (ரஹ்) என்று மாபெரும் எழுத்தாளர் இருந்தார். (இவர்கள் எழுதிய பல நூட்கள் அரபி பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது)அவரின் மீது நடவடிக்கை எடுக்க அந்த கால அரசரே தயங்கினார். ஏன் என கேட்ட போது எனது வாள் முனை ஆட்சி செய்யாத பகுதிகளிலெல்லாம் அவரது பேனா முனை ஆட்சி செய்கிறது என்று பதிலளித்தார்.

அது போல பேச்சாற்றலும் பேரற்புதமானது.
நபி மூஸா (அலை) அவர்கள் தனது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களுக்கும் நபித்துவம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார்கள்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அவரது பேச்சாற்றல் தான்.

وَأَخِي هَارُونُ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُصَدِّقُنِي ۖ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ
28:34. இன்னும்:என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்று கூறினார்).

قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطَانًا فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا ۚ بِآيَاتِنَا أَنتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغَالِبُونَ
28:35. (அல்லாஹ்) கூறினான்: நாம் உம் தோள்புஜத்தை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றி யளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்.

நபித்துவம் என்பது முயற்சியால் கிடைக்கும் பாக்கியமல்ல, அத்தகைய நபித்துவம் இங்கு ஒருவரின் பேச்சாற்றலுக்காக வழங்கப்படுகிறது என்றால் இதன் மூலம் பேச்சாற்றலின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

பேச்சாற்றல் கொண்டு நபித்துவத்தின் தோள்கள் வலுப்படுத்தப் பட்டுள்ளது. அது இருந்தால் வெற்றி நிச்சயம், எதிரிகள் நம்மை நெருங்க முடியாது என்பதெல்லாம் பேச்சாற்றலின் பெருமை களையும் பலத்தையும் பறைசாற்றுகிறது.

தஃவா - அழைப்புப் பணி புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும்.

ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
16:125. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.

புத்திசாலித்தனமான முறையில் அழைப்பது என்றால் யாருடைய மனதையும் புண்படாமல் புரிய வைக்க வேண்டும்.

ஒருமுறை ஒரு பெரியவர் தவறான முறையில் ஒழு செய்து கொண்டிருந்தார். அதை இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலி) இருவரும் பார்த்தார்கள். வயதில் மூத்த அந்த பெரியவரிடம் அவரின் தவறை உணர்த்த வேண்டும். நேரிடையாக நீங்கள் ஒழு செய்த முறை தவறு என்று கூறுவது மரியாதைக் குறைவாகி விடும், மட்டுமல்ல சிறுவர்களின் கூற்றை எப்படி ஏற்பது என்ற ஈகோவும் வந்து விடலாம்.அல்லது சிறுவர்களுக்கு என்ன தெரியும் என்ற அவநம்பிக்கை யும் கூட வந்து விடலாம்.அதேசமயம் தவறை சுட்டிக் காட்டாமலும் இருந்து விட முடியாது, எனவே நாம் அவருக்கு பக்குவமான முறையில் தவறை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற தீர்க்கமான யோசனையோடு அந்த பெரியவரிடம் சென்று கூறினார்கள் ;

பெரியவரே! நாங்கள் இருவரும் சிறுவர்கள். நீங்கள் பெரியவர். நாங்கள் ஒழு செய்கிறோம். அது சரியா? தவறா? எனத் தெரியவில்லை. இப்போது நீங்கள் அதைப் பார்த்து சொல்லுங்கள் என வேண்டி நின்றார்கள். சரி எனக்கூறி சிறுவர்களான இருவரும் ஒழுச் செய்வதை பார்க்கத் தொடங்கினார். இருவரும் அழகாக சுன்னத்தான முறையில் ஒழு செய்து காட்டினார்கள். இவர்கள் ஒழுச் செய்வதைக் கண்ணுற்ற பெரியவர் இப்படித்தான் நாமும் ஒழுச் செய்ய வேண்டும் என தன் தவறை சரி செய்து கொண்டார்.

இது தான் புத்திசாலிதனமாக அழைப்புப் பணி செய்வதாகும்.

அழகிய உபதேசம் என்பது மனம் கவரும் சரித்திரங்களை சொல்வதாகும். நிற வெறியால், தீண்டாமையால், ஜாதி வேற்றுமை யால் மனம் புண்பட்டு இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு மன நிறைவு தரும் செய்திகளைக் கூறுவது புண்பட்ட இதயத்திற்கு மருந்தாக அமையும். ஆதரவற்ற மக்களுக்கு அன்பான ஆதரவான அரவனைக்கும் வரலாற்று படிப்பினை மிக்க செய்திகளைக் கூற வேண்டும்.

அழகான முறையில் தர்க்கம் செய்வது என்பது, அசத்தியத்தில் இருப்பவர்களின் தவறான கொள்கைகளை நாமாக சொல்லாமல் அவராக புரிந்து கொள்ளும் விதத்தில் வாதாடுவதாகும்.

சூரியனை, சந்திரனை, நட்சத்திரங்களை கடவுளாக வழிபட்டு வந்த ஸாபியீன்களிடம் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் அந்த மக்களிடம் அவைகள் கடவுளாக இருக்கலாம்? என்று அவர்களாகவே இறங்கி வந்து விவாதம் செய்து அவைகள் மறைந்த போது இது எப்படி கடவுளாக இருக்க முடியும்? கடவுளாக இருப்பவன் மாறாதவனாக மறையாதவனாக இருக்க வேண்டுமே! மறையக்கூடிய மாறக்கூடிய இந்த சூரிய சந்திர நட்சத்திரங்கள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று அவர்களை சிந்திக்க வைத்தார்கள்.

فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا ۖ قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ
6:76. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; “இதுதான் என் இறைவன்!என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்என்று சொன்னார்.

فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَٰذَا رَبِّي ۖ فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ
6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்என்று கூறினார்.

فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَٰذَا رَبِّي هَٰذَا أَكْبَرُ ۖ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ
6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியதுஎன்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்என்று கூறினார்.

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
6:79. வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).

எடுத்தவுடன் அவர்களது தவறான கொள்கைகளை எதிர்க்காமல், எதிர்மறையாக விமர்சிக்காமல் கொஞ்ச தூரம் அவர்களோடு பயணித்து அவர்களது பாதை தவறானது என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்களை சுய பரிசோதனையை செய்ய வைத்து உண்மையை சிந்திக்க வைத்து நமது பாதைக்கு மெய் வழிச் சாலைக்கு அவர்களை அன்பாக அழைக்க வேண்டும்.

ஃபிர்அவ்ன் போன்ற அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அநியாயக்கார அரசனிடம் கூட அழைப்பு பணியை மேற்கொள்ளலாம் - மேற்கொள்ள வேண்டும். அவனிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் நயமாக எடுத்து இயம்ப வேண்டும்.

சொல்ல விரும்பும் கருத்துக்களை அன்பாக எடுத்துக் கூற வேண்டும். யாரையும் எளிதில் ஈர்த்திடும் வகையில் எளிமையாக எடுத்துச் சொல்ல வேண்டும். எல்லோரையும் கவரும் வகையில் மென்மையாக எடுத்துரைக்க வேண்டும். கடினமான சொற்கள் தடித்த வார்த்தைகள் நமது பிரச்சாரத்தில் இருக்கவே கூடாது. கண்ணியமான சொல்லாடல் களை கனிவாக பணிவாக பயன்படுத்த வேண்டும்.

فَقُولَا لَهُ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَىٰ
20:44. நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.

நளினமான நல்லுபதேசம் எல்லோரையும் நல்லுணர்ச்சி பெற வைக்கும். இறையச்சத்தை ஏற்படுத்தும். ஃபிர்அவ்னை விட பெரிய வம்பனும் இல்லை. மூஸா (அலை) அவர்களை விட அழகிய அழைப்பாளரும் இல்லை.

அழைப்புப் பணியை எடுத்துச் செல்லும் மக்களில் ­ஃபிர்அவ்னை விட அநியாயக்கார அட்டூழியம் செய்யும் ஆணவக்காரனும் இல்லை.அத்தகைய ஃபிர்அவ்னிடம் கூட நளினமாக பேச வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான். எனவே யாரிடம் பேசினாலும் பொறுமையாக பசுமையாக பவ்வியமாக பேச வேண்டும்.

ஃபிர்அவ்ன் நம்பிக்கை கொள்ள மாட்டான் என்று அல்லாஹ்வுக்கு தெரியும். இருந்தும் அவனிடம் எடுத்துச் சொல்வதாக இருந்தாலும் மென்மையான சொற்பிரயோகம் நளினமான உபதேசம் கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். விவேகமற்ற வேகமான பேச்சி கேட்பவரையும் கேட்க வைக்காது. திருந்த மாட்டான் என தெரிந்தாலும் அவனிடம் பேசும் போது கூட நம்பிக்கையோடு பக்குவமாக பேச வேண்டும். திருந்தாத ஃபிர்அவ்ன் போன்றவரிடம் பேசும் போது அவன் நல்லுணர்வு பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு எத்தி வைக்க வேண்டும். நம்முடைய நயமான பேச்சி ஒரு வேளை அவனுக்கு உபயோகப்படாமல் போனாலும் உபதேசிக்கும் நமக்கு உபயோகமில்லாமல் போகாது. அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலி நமக்கு உண்டு.

إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ
2:6. நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.

இந்த வசனத்தில் எச்சரிக்கை செய்வதும் செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு ஒன்று தான் என்றுதான் அல்லாஹ் கூறுகிறானே தவிர உங்களுக்கு சமம் என கூறவில்லை என்பது ஆய்ந்துணரத்தக்கது.

அதுமட்டுமல்ல ஒரு இடத்தில் நாம் இதய சுத்தியோடு மிகுந்த ஈடுபாட்டோடு எடுத்துரைக்கும் உபதேசம் அங்கே பயன்பாடு இல்லாமல் போனாலும் அதனால் மற்ற இடங்களில் நாம் எதிர்பார்க்காத இடத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

நபி அவர்களின் வாழ்க்கையில் சந்திரனைப் பிளந்து காட்டியது மகத்தான பெருநிகழ்வு.ஆனால் உலகையே அதிசயிக்க வைத்த அந்த நிகழ்வைக் காட்டியும் கூட அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள் அதைக் கண்டவர்கள் எவருக்கும் ஹிதாயத் கிடைக்க வில்லை.ஒரு மகத்தான பெருநிகழ்ச்சியை நடத்தியும் அது பயனற்றுப் போய் விட்டதா? என்றால், அந்த இடத்தில் அதன் பயன்பாடு கிடைக்கா விட்டாலும் எங்கோ (இந்தியா) இருந்த திருவிதாங்கோடு மகாராஜா  சேரமான் பெருமானின் ஹிதாயத்திற்கு அது காரணமாக அமைந்தது.அதுபோல் தான் நாம் மனத்தூய்மையுடன் செய்யும் அழைப்புப்பணி அந்த இடத்தில் காரியமாற்ற வில்லையென் றாலும் அதன் பரக்கத்தினால் உலகத்தில் வேறு ஏதாவது இடத்தில் அதன் பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

அழைப்பு பணி செய்பவரிடம் கவலை இருக்க வேண்டும். மக்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்ற ஆசையும் அக்கறையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே என்ற வேதனையும் இருக்க வேண்டும்.

எந்தளவிற்கு அழைப்பு பணியில் கவலை இருக்க வேண்டும் என்றால் நமது நாயகம் அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளாத மக்களின் மீது எவ்வளவு கவலை இருந்ததோ அந்தளவுக்கு கவலை இருக்க வேண்டும்.
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا
18:6. (நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!

சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொல்லியும் ஏற்க முன்வராத மக்களின் மீது நமக்கு இருக்க வேண்டிய அக்கறை கவலையின் அளவு கோல் இந்த வசனத்தில் விவரிக்கப்படுகிறது.

கவலை சாதாரண கவலை அன்று துக்கம் எந்தளவுக்கு தூக்கலாக இருக்க வேண்டும் என்றால், ஒரு கட்டத்தில் துக்கம் தாளாமல் நாம் இறந்து விடுவோமா என்ற எண்ணம் கூட வர வேண்டும். துக்கம் தாங்க முடியாதவன் கடைசியாக எடுக்கும் முடிவு தற்கொலை. அந்த முடிவின் விளிம்பு வரை நாம் சென்று விட வேண்டும். ஆனால் தற்கொலை செய்து விடக் கூடாது அதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஆனாலும் அந்த கடைசி முடிவின் அளவுக்கு அழைப்பு பணியோடு நாம் ஒன்றி விட வேண்டும். எதார்த்தமான ஈடுபாடு உடையவர்களாக நாம் ஆகி விட வேண்டும்.

இத்தகைய கவலையோடு நாம் அழைப்புப் பணியை மேற்கொள்கிற போது அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பெற்ற வெற்றியை நிச்சயமாக பெற முடியும். இந்த உலகம் இஸ்லாத்தின் பக்கம் வந்து சேர முடியும்

அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக ஆமீன்.


No comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks